கண்ணீர் பதில் சொல்லும்
அந்தரங்க நிலையில்
அவதிப்படுகிறது எனதுள்ளம்
அல்லல் நிறைந்த இவ்வாழ்வில்
அபயம் இல்லாத அபலையாய் நான்
அந்தகனும் என்னிடம் வர மறுக்கின்றான் -என்னை
அநாதையாய் தவிக்கவிட்ட இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்......!
ஆகுலம் வந்து என்னை
ஆக்கிரமித்து ஆட்சி செய்கின்றது..
ஆதாயம் கிடைத்தால்தான்
ஆதரிப்பாரும் வருவரோ .....?
ஆறுதல் கொடாமல்
ஆர்ப்பரிக்கும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்
இலட்சணம் இல்லாத
இவ்வுலகில் நான்
இலௌகீகம் அறிவது எப்படி....?
இயமதருமரே நீங்களும் எனக்கு
இழவோலை தர மறுப்பதேன் ...?
இறைவா உன் படைப்பிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்......?
ஈன்றாரும் இல்லை
ஈங்கிசையின் உக்கரத்திற்கு
ஈடுகொடுக்க முடியவில்லை என்னால்
ஈசனும் இங்கு வந்தால் அவனுக்கும்
ஈசலின் வாழ்க்கை தானோ ....?-தினம்
ஈட்டியால் குத்தி வருத்தும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்...!
உள்ளக்குமுறலோடு
உலா வரும் நெஞ்சிற்கு
உறுதுணையாய் நில்லாமல்
உதாசீனப்படுத்துகின்றன சில மனங்கள்
உதவும் கரங்கள் எங்கே ...?என்னை
உதறிவிட்ட இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்.....?
ஊதைக்காற்றடிக்கும்
ஊழிக்காலத்தில்
ஊளி இல்லாமல்
ஊனமாய் கிடக்கின்றேன் நான்
ஊழ்வினை என்றியம்பி -என்
ஊளி தீர்க்காத இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்...?
எண்ணற்ற துன்பங்களில் மிதந்து
எல்லையில்லா சுமைகளை சுமந்து
எடுத்த பிறவிக்காய் அழுகிறேன்..
எல்லிருளில் கிடக்கும் பிணத்தை
எரிவனத்திற்கு எடுத்துச்சென்று
எரியூட்டா இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும்...?
ஏழ்மையாய் பிறந்ததற்கு
ஏங்குகின்றேன் தினமும்
ஏக்கங்கள் எல்லாம்
ஏறிட்டுப் பார்க்கின்றன
ஏழு பிறப்பிலும் என்னை
ஏளனமாய் பார்த்த இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ...?
ஐயரிவுயிரின்
ஐயுணர்வை பிழிகின்றனர்
ஐக்கியத்தை நாடமுடியவில்லை
ஐயுறவுடன் வாழ்வதனை
ஐதீகமக்கப்பார்க்கும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ....?
ஒதுக்கிடமொன்றில்
ஒட்டடை தட்டி
ஒண்டி வாழ்கின்றேன் நான்
ஒப்பனை செய்து கொண்டு -என்னை
ஒய்யாரமாய் வாழவிடாமல்
ஒடுக்கி நசுக்கிய இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ...?
ஓமகுண்டலத்தில் எனையிட்டு
ஒமப்பொடியாக்கி..........!
ஓலையில் சுற்றி...........!
ஓடத்தில் வைத்து........!
.ஓடையில் விட்டு .....!
ஓரங்கட்ட விடாமல் ஓடவிடும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் .....!
ஔவை இல்லை
ஔரசனும் இல்லை
ஔவியம் இல்லை
ஔதாரியமும் இல்லை -வாழ்வதற்கு
ஔத்தியமும் இல்லை பிறர் பிணிக்கு என்னை
ஔடதமாக்கிய இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ....!
கண் வளர்க்கவும் முடியவில்லை
கண் விடுக்கவும் முடியவில்லை
கச்சணிந்த என்னை
கயமை குணம் படைத்தார்
கச்சேரிக்கு அழைக்கின்றனர்.
கஞ்சமகன் என்னை படைத்ததேனோ ....?
கல் நெஞ்சங்களை சுமக்கும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ...!
காகித ஓடமாய்
காற்றடிக்கும் திசையில் செல்கிறேன்
காதல் தந்து எனக்கு
காவலிருப்பார் இல்லையோ........?
காத்திருந்து .......!
காரியம் சாதித்து ....!
காலை வாரிவிடும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ....!
கிழிந்த ஆடையோடும்
கிளி அழகோடும்
கிடக்கிறேன் வீதியில் நாதியற்று
கிண்டல் செய்து களிப்புற்று-மது
கிண்ணத்தை கையிலேந்தும்
கிறுக்கர்களுக்கு எல்லாம்
கிரீடம் சூட்டும் இவ்வுலகிற்கு
என் கண்ணீர் பதில் சொல்லும் ....!
நான் ரௌத்திரம் கொண்டு
எழுந்துவிட்டேன்
இனியும் தளரமாட்டேன்......!!!