வாகனம் ஓட்டும் வழிமுறைகள் பாப்பா பாட்டு

வண்டி வாகனம் வாங்கிக்கோ - தம்பி
வாகாய் ஓட்டிடக் கத்துக்கோ !
வண்டி ஓட்டிடும் வழிமுறையை -அண்ணன்
பாங்காய்ச் சொல்கிறேன் கேட்டுக்கோ !

பள்ளிக்கூடம் அருகே பையப் போக வேணும்
பக்கம் திரும்ப நேர்ந்தால் கையைக் காட்ட வேணும்
தள்ளு வண்டி பின்னே தள்ளி ஒதுங்க வேணும்
தலையைத் திருப்பிப் பேசும் தன்மை மாற வேணும் !

சிக்னலிலே விளக்கெரியும் கூர்ந்து நோக்க வேணும்
சிவப்பு மஞ்சள் பச்சைக்கேற்ப நிறுத்தி ஓட்ட வேணும்
எக்கணமும் சாலையில் கவனம் பதிக்க வேணும்
செல்போனை பயணத்தில் அமர்த்தி வைக்க வேணும் !

உரிமம் மற்றும் ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேணும்
உரியவர்கள் கேட்கும் போது எடுத்துத் தர வேணும்
இரவினிலே தலை விளக்கை எரிய விட வேணும்
எதிரிலொரு வண்டி வரின் ஒளி குறைக்க வேணும்!

வளைவுகளில் முந்துகிற ஆசை துறக்க வேணும்
வண்டிகளை முந்த வேண்டின் ஒலிஎழுப்ப வேணும்
தலைக் கவசம் அணிவதற்கு சுய விருப்பம் வேணும்
காரை ஓட்டிச் செல்லும்போது வாரை மாட்ட வேணும்!

விபத்தின்றி செல்வதற்கு விழிப்புணர்வு வேணும்
விவேகமான பயணமெனில் மித வேகம் போதும்
ஆபத்தின்றி வாகனத்தை அமைதியாக ஓட்டி
ஆனந்தமாய் வாழ்ந்திடுவாய் ஆயுளை நீ கூட்டி!

-முத்து நாடன்

{இக்கவிதை தினமணி - சிறுவர் மணியில் (13-09-2014) வெளிவந்தது}

எழுதியவர் : முத்து நாடன் (19-Sep-14, 11:25 pm)
சேர்த்தது : ராஜேந்திரன் K
பார்வை : 123

மேலே