உணர்வலைகள் -வாழ்த்துப் பா

நினைவலைகள் மனமெழுதும் கவிதை யாகும்
நீரலைகள் கடலெழுதும் கவிதை யாகும்
கனவலைகள் துயிலெழுதும் கவிதை யாகும்
காற்றலைகள் மின்சாரக் கவிதை ஆகும்
கணிணிவளைத் தளஎழுத்தில் வார்த்தை கோர்த்து
கவிதைகளை கவிமழையாய் யாத்தீர் வார்த்தீர்
உணர்வலைகள் உணர்வெழுதும் கவிதை என்று
ஒருதொகுப்பாய் தரும் பழனி அய்யா நன்று!
ஒளிஅலையின் அளவென்ன? அலையின் நீளம்
ஒலிஅலையின் அளவென்ன? அதிர்வெண் காட்டும்
வெளிஅலையை தொலைகாட்சி படங்கள் காட்டும்
விண் அலையாம் மின்னலை நாம் அளக்கக் கூடும்
வளிஅலையோ மணக்குமலர் மணத்தைக் காட்டும்
வானலையோ வானொலியில் பாட்டாய் கேட்கும்
ஒளிரலையை ரேடியத்தின் ஒளியே காட்டும்
உணர்வலைகள் அதைஉங்கள் நூலே காட்டும்
கருடனவன் பறக்கும்திறன் ஈயா காட்ட?
கையாலா வானத்தை அளந்து காட்ட?
ஒருதுரும்பா கட்டிவிடும் வான வில்லை?
ஒளிவேகம் சொல்லிடுமா நத்தை ஊர்ந்தே?
உரைத்துப்பொன் தரமுரைக்க அம்மிக் கல்லா?
உம்கவிதை திறமுரைக்க எந்தன் சொல்லா?
இருந்தாலும் “உணர்வலைகள்” வெல்லும் என்றே
இளையவன் நான் உம் நூலை வாழ்த்துகின்றேன்

நான் மட்டுமா
என் ஆசான் வாலிப வாலியும்
ஓ!அலை ஓயலை
உணர்வலைகள் ஓய்வதில்லை என்கிறார்
அன்புடன்
சு.அய்யப்பன்

எழுதியவர் : சு. ஐயப்பன் (20-Sep-14, 9:50 am)
பார்வை : 304

மேலே