அழகிய முரண் அவன் - டைரி
அழகிய முரண் அவன் - டைரி
=============================
காற்றின்களி கிளையின் ஆட்டங்களின் மேலும்
கிராமத்து வீட்டுக் கூரைகளின் மேலும்
நீ பெண்கொத்திக் கழுகாய்
பறந்து திரிந்த காலங்களில்
பலரும் சொல்லிப்போனார்கள்
உன் கதை தெரிந்த யாரும்
நீ கல்யாணம் செய்துக்கொள்ள
உனக்கொரு பெண் தரமாட்டார்கள் என்று
இருந்தும் நம்பித் தொலைத்தேன்
காலம் கழிந்த தவறுகளுக்கு
எப்படி பிராயச்சித்தம் செய்வது
மறக்கும்படியான தவறுகளையா செய்திருக்கிறேன்
உன்னோடு சேர்ந்து ,,
கேளெனச்சொல்லி கேட்கச் செய்கிறான்
அவன் சரித்திரம் கூற
கிராமத்திற்கொருத்தி இருப்பாளாம்
என்னையும் அன்னிலைக்காக்கி செல்வாயா என்றதற்கு
வார்த்தைகளின் பஞ்சம்வர
விக்கித்து நின்றானே
ஆலமரத்து பிள்ளையார் சாட்சியாக
கற்பூரமடித்து சத்தியஞ் செய்தானே என்முன்னால்
என்னைப் பெற்றெடுத்தவர்களிடம்
உறுதியாக சொல்லியிருந்தேன்
அவன் என்னை கைவிட்டுச் செல்லமாட்டான் என்று
அவனால் சிக்ஷிக்கப்பட்ட
யாரோ ஒருவள் அவ்வழி சொல்லிப்போனாள்
சேலைப் பந்தல் வாசற்படிக்கட்டுகளில்
குத்தகைக்குப் போனவனுக்கு
யாருடையக் காதலும்
மென்னுத் துப்பிய வெற்றிலைக் கசடுதான் என்று
பேசுவானோ பாடுவானோ சிரிப்பானோ
அத்தனை வித்தைகளையும்
நாக்கூசாமல் செய்து ஈர்க்கவே செய்திடுகிறான்
நாவால் கழுவியோ
அவன் அடர்மீசையின் ஒற்றை இழையால்
தழுவியோ
குளிருக்கு இதமென்றுக்கூறி
மூக்கின் வழி மூர்ச்சையாலும்
வெம்மைக்கு இதம் என்றுக்கூறி
தொண்டைக்குழல்வழி மூர்ச்சையாலும்
ஒன்றுமில்லாமலாக்கி
சித்தமிழக்கச்சிதிலம் செய்தவன் நினைவுகளை
இன்னொருவனிடம்
எப்படி என்னால் விற்பனை செய்யமுடியும்
கூறுங்களேன்
என்னதான் செய்வது
சபித்துவிட துணியும் போதெல்லாம்
என் அத்தனை வெட்கங்களையும் விழுங்கிவிட்ட
அவன் கல்மிஷ வேட்கைகள்
பூஜ்ஜியம் மின் அலகுக்கூறின்
மின் குமிழி விளக்கின்
வெளிச்சத்திற்கு முன்னால்
திமிர்ந்த நிழலாய்
நிமிர்ந்து இடுப்பில் கைவைத்த வண்ணம்
என்னை உன்னால்
என்னதான் செய்துவிட முடியும்
என்பதைப்போல்
வந்து வந்து என் இரவுகள் தின்கிறான்
என் தனிமைக் குளிருக்கு
இறகுப் போர்த்திவிட இன்றெல்லாம்
அவன் கரமாற்றுப் போனது
பறந்து செல்லும் பட்சிகளே
உங்கள் இனத்து இராஜாளிதான் அவன்
இந்நேரம் எந்த கிளையில்
இரைத்தின்று கொண்டிருப்பானோ
தெரியவில்லை
யாரேனும் கண்டால் இதை கூறிச்செல்லுங்களேன்
அவனிடம்
எனை இரையாக்கக் காத்திருக்கும்
இன்னொருவனின் கரம்
எனை நெருங்கும் முன்பே
என் தேகம் மரத்து
இதோ கற்சிலையாகிக் கொண்டிருக்கிறேன்
அதற்குமுன்
பறிதல் இறுகும் இவ்வுயிரையாவது
அவன் வசம்
அள்ளியெடுத்துக்கொண்டு போகச்சொல்லுங்களேன்
அனுசரன்