வினோத ஆசைகள் -சந்தோஷ்
வினோத ஆசைகள்.
--------------------------------
அந்திசூரியனின் அழல்நிறத்தை
என்பேனாவில் ஊற்றி
இயற்கையை எழுதிட ஆசை..!
சிறுமழலை ஊதிவிடும்
நீர்குமிழியில் ஊடுருவி
வானவில்லை பறித்திட ஆசை..!
பூக்களின் வாசனையில்
என்னை நுழைத்து
ஆசை அத்தைமகளின்
கார்கூந்தலை முத்தமிட ஆசை..!
சின்ன சின்ன ஆசை
திரையிசையில்
வைரமுத்துவை கழித்து
எனனை கூட்டிட ஆசை...!
”கோயில் கூடாது என்பதல்ல
கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது “
அன்றைய கலைஞரின்
அனல்தெறிக்கும் வசனத்தில்
சிவாஜியாக அரிதாரமிட ஆசை..!
விஞ்ஞான அறிவில்
நானே கர்ப்பமடைந்து
ஈ.வே.ரா பெரியாரை
வாலிபராக பிரசவத்திட ஆசை....!
நல்வாழ்வு தரும்
டாஸ்மாக் கடைகளை
ஓரே ஒரு இரவில்
என் கவிதைசுடரில்
கொளுத்தி பொசுக்கிட ஆசை...!
வரும் என் பிறந்தநாளில்
வயது பத்து குறைந்து
எந்த கழதையோ குதிரையையோ
மணம்புரிந்து வேலைவெட்டியில்லா
இந்த ஊர்வாய்களை மூடிட ஆசை...!
இவையாவும் நடந்துவிட்டால்
திருப்பதி பெருமாளே...!
உனக்கு மொட்டைப் போட ஆசை.....!
(ஆசைகளுக்கு முடிவில்லை. )
-இரா.சந்தோஷ் குமார்