செய்திகள் வாசிப்பது நான்

கண நேர முடிவில்
காட்சி மாறியது,
கட கடவென சரிந்த
மண்,
வெட்டிக் கொண்டிருந்த
கிணற்றை மூடியது....
செய்வதறியாத உணர்வுகள்
உருண்டு புரள
ஏதுமறியாத கை ஒன்று
முட்டி மோதி வெளியேறி
நின்றது.....
சுற்றும் முற்றும் உருண்ட
விழிகளில் இரண்டு
நற நறவென்ற,
மணலைக் கண்டு கொள்ளாமல்
பிச்சை கேட்டு
அசைந்த கையில்
கழற்றிச் சென்றது
கால் சவரன் மோதிரத்தை....
கடைசியில் வழக்கம் போல
ஆற அமர வந்து சேர்ந்தன
அத்தியாவசிய தேவைகள்...
அன்றும் செய்தித் தாள்கள்
காத்துக் கிடந்தன
கொத்தித் தின்ன காத்திருக்கும்
கழுகைப் போல....
அன்றிரவும், வழக்கம் போல்
செய்தி பார்த்து
உண்டு உறங்கியதில்
நானும் ஒருவன்....
கவிஜி