தயக்கம் நீக்க வா நண்பா
அன்புள்ள நண்பா என்னவென்று நான் மடல் வரைவேன்
நீ என்னிடம் அதிகம் கேள்வி கேட்டு தூது விட்டாய் உன் மடலை
நான் என் மனச் சோகத்தைச் சொல்லி தூது விடுகின்றேன்
என் மடலை
ஒரு நிலை அடையாது தடுமாறும் என் எண்ணக் குமுறலை
நீயும் கேளடா...!!!
தோழியாக நினைத்தேன் அவளை நான்
தாலி ஒன்று கேட்கின்றாள் அவளோ
தூரத்து உறவாக நேசித்தேன் நான்
அவளோ துணைவனாக வா என்று கூறுகிறாள்
நெருங்க முடியாத நிலையில் நான்
வெறுக்க முடியாத நிலைமையில் அவள்
பிரிய மனம் இல்லை பிரியமான தோழி அவள்
பிரிந்தாலும் அவள் விடுவதாக இல்லை அவள் உயிரே நான்
என் இதயம் நேசிக்கின்றது அவளை புத்தி தடுக்கின்றது
அவளோ மூச்சு பேச்சு நான் தான் என்று முடிவானாள்
உள்ளத்தில் இடம் நான் கொடுத்தால் வீட்டில் இடம்கிடைக்குமா
என் எண்ணத்தில் பல கேள்வியடா நண்பா
அவள் அன்புக்கு ஏங்கும் ஜீவன் நானோ பயத்தில் நடுங்கும் ஜீவன்
இரண்டுக்கும் இடையில் தவிக்கின்றது மனசு
இதயங்கள் இடம் மாறவில்லை புத்தியோ பேதலித்துப் போனதடா.
அவள் ஏன் என்னை நேசிக்கிறாள் நான் அறியாத விடையடா
கேட்கவும் துணிவு இல்லையடா நண்பா
தனிமையில் பார்த்ததும் இல்லை அழகைக் காட்டி மயக்கவும் இல்லை
அவள் பேச்சில் நான் கொஞ்சம் சறுக்கி விட்டேன்
விதி வந்து இணைக்குமா சதி வந்து பிரிக்குமா
நான் அறியேனடா நண்பா இறுதி வரை அவள் அன்பு
கிடைக்குமா இல்லை புயல் அடித்துக் கலைக்குமா
இதே கேள்விதான் அவள் உள்ளத்திலும் திட்டித்
தீர்க்கின்றாள் என்னை உரிமையோடு
தட்டிக் கழிக்கின்றேன் அலட்சியமாக
வெறுப்பா கோபமா விருப்பம் எதுவென்று தெரியவில்லை
நண்பா மணக்காவிட்டாலும் மறக்க மாட்டேன் அவள் அன்பு உண்மை
என் பாசமும் நிஜம் அவளிடம் நான் கூறவில்லை
இத்தனையும் விடையறியாக் கேள்வியடா நண்பா
விடை கூற நீ வேண்டுமடா தோள் கொடுத்து தட்டிக்
கொடுக்க விரைந்து வாடா நண்பா காத்திருக்கின்றேன்
இப்படிக்கு உன் ஆசை நண்பன்
அழகர் சாமி