கவின் சேர்க்கும் காலம்

கவின் சேர்க்கும் காலம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலத்தை மதியானை இந்த ஞாலம்
கண்ணெடுத்தும் பார்க்காது ; வாழ்க்கை என்னும்
கோலத்தை மாற்றுவதும் ஏற்றத் தாழ்வைக்
கோடிட்டுக் காட்டுவதும் காலம் ஒன்றே !
காலந்தான் போதவில்லை என்று சொல்லிக்
கடமையினைச் செய்பவனோ உயரு கின்றான்
காலந்தான் போகவில்லை என்று வீணே
கழிப்பவனோ ஏதுமின்றித் தாழு கின்றான் !

கழிகின்ற நொடிப்பொழுதும் திரும்பா தென்று
கணக்கிட்டு முனைப்போடு செயல்செய் வோன்தான்
விழியுயர்த்தும் சாதனைகள் படைத்துக் காலம்
வீழ்த்தாத புகழோடு திகழ்வான் நன்றாய் !
வழிபார்த்துக் காத்திருந்து வந்த போது
வாய்ப்புதனை விட்டிடாமல் கொத்தும் கொக்காய்
விழிப்புடனே இல்லாதான் எதுவு மிங்கே
விளையாத களர்நிலம்போல் வெறுமை யாவான் !

நேற்றையநாள் உடைந்துபோன பானை ; நாளை
நேரில்லா மதிலின்மேல் பூனை ; இன்றோ
போற்றுகின்ற கையிலுள்ள வீணை தேனாய்ப்
பொழியுமிசை மீட்டுவோனே ஏற்றம் காண்பான் !
ஊற்றுவர நீரிறைக்க வேண்டும் நல்ல
உயர்வுவர உழைப்பீய வேண்டும் வீசும்
காற்றைப்போல் இயற்கைதந்த காலம் தன்னைக்
கண்ணாகப் பேணுவோனே வெற்றி காண்பான் !

*************

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (4-Oct-14, 5:26 pm)
பார்வை : 36

மேலே