நாமெல்லாம் கடவுளே-வித்யா
நாமெல்லாம் கடவுளே......!-வித்யா
உறவுகளின் நினைவுகள்
இன்று நனைக்கும் சாரலாய்...
உறவுகளின் கனவுகள்
நாள்தோறும் தேடலாய்......
உறவுகளோடு வாழ்வு
வருவதும் போவதுமாய்.....
அதில் அன்பு
இருப்பின் நிலையறிந்தும்
நிலையற்றதாய்.........!!
தனிமையில் கழித்த
இரவுகளனைத்தும்
"ஊரறிய விழிக்காமல்
உள்ளூர உறங்கும் கனவுகளின்"
திருவிழாவாகவே நீள்கின்றன...
இதுவரைக் காணா
புதிய கனவொன்றின்
வருகைக்காகக் கண்ணுறங்காது
காத்திருக்கும் எனதிரவுகள்.......
என்னதான் வாழ்க்கையின்
போக்கிலே பயணப்பட முயன்றாலும்
முடிவு என்னவோ
அதிருப்தியாகவே இருக்கிறது
இப்போதெல்லாம்.......
ஆம்.......வாழ்வு,
அதிகம் பெற்றுக்கொண்டு
குறைவாகக் கொடுப்பதால்....!!
கற்பனைகளில் எனை
வெளியே எடுக்கும் நான்
நிஜங்களில் மீண்டும்
அலமாரிக்குள்ளேயே வைத்துப்
பூட்டி விடுகிறேன்......!!
தவறான புரிதலிலோ
தேவைகளின் குறைதலிலோ
ஆழமானப் புறக்கணிப்புகளின்
உச்சாணிக்கொம்பினை எட்டும் போதும்
மிச்சம் மீதி இன்றி
தூக்கி எறியப்படும் போதும்
மௌனமாய் வேடிக்கைப்
பார்க்கும் நாமெல்லாம்
கடவுளுக்கு ஈடானவர்கள்.......!!
அர்த்தங்கள் அர்த்தப்படட்டும்
அர்த்தமற்றவைகள் யாவும்
பரிசீலனையில் வைக்கப்படட்டும்..........!!