மங்கையும் மரணமும் -இது ஒரு சுவாரசியமான நாடகக்கவிதை கொங்சம் பொறுமையா படிக்கனுமுங்க அவ்ளொதான்

விதியை
மதியால்
வெல்ல முடியுமா?
அதோ
என் விதியை
முடிக்க
விரைந்து வருகிறான்
எமன்!....
அதோ!
ஒரு மங்கையாள்
வருகிறாள்!
எனைக்காப்பாற்ற
வேண்டுகிறேன்!
அவள்
மரணத்தோடு
பேசிப்பார்க்கிறாள்!
பகுதி-1
மங்கை:
மரணமே நில்...
இது ஜனனத்தின்
சத்தியக்கோடு!
மரணம்:
இல்லை
இது
சத்தியத்தின்
சாபக்கேடு!....
மங்கை:
என்னுயிர்
கொடுத்தேனும்
அவனுயிர் காப்பேன்!..
மரணம்:
புதுமை பல
கண்டுவிட்டான்
பதுமை நீ
உன்
பச்சைத்தேகம்
பார்த்தால்
இச்சைக்கு இழுத்துச்
செல்வான்!...
மங்கை:
இருண்ட சரிதையில்
இருவ ரெழுதிய
சுய சரிதை நான்!..
மரணம்:
இல்லை
இருண்ட சரிதையில்
யார் அந்த
இருவ ரென
தெரியாத
சுக சரிதை நீ!...
மங்கை:
பகலில்
என் உயிர்பறித்தாலும்,
என்பெயரில்
ஒரு யுகம்
தோன்றும் இரவில்!
மரணம்:
பகலில்
பலாத்கார மாவாய்!...
இரவில்
தேகப்பொரு ளாவாய்!...
நிறைவில்
பாவப்பொரு ளாவாய்!...
மங்கை:
நீ
முதுமையாய்
திரிவதால்
பதுமை
உனைத்தீண்டவில்லை!
மரணம்:
பதுமை யெனை
தீண்டியிருந்தால்
பலி தீர்க்காத பாவம்
என்னை
பலி தீர்க்கும்!...
மங்கை:
பலி தீர்க்கும்
பள்ளியில்
உனக்கு
பாடம் கிடைக்கட்டும்!
மரணம்:
பலியானவர்களின்
கொல்லியில் தான்
எனக்கு
முழு வேடமும்
கிடைக்கும்!...
மங்கை:
நீ
தெருவில் திரிவாய்
நான்
கருவில் திரிவேன்!..,
மரணம்:
காதல் வினியோகம்
செய்யும்
கடைத்தெரு நீ....
அதில்
சாதல் வினியோகம்
செய்யும்
கடைசித்தெரு நான்!
மங்கை:
பத்து திங்கள்
உன்னை சுமப்பேன்....
அதற்காகவாவது
வரம் கொடு!
மரணம்:
தன்னுயிரை
தானே மாய்க்கும்
தவ வலிமை
எனக்கு வேண்டாம்!...
மங்கை:
மானம் காக்கும்
என் பெண்மை யாவருக்கும்
தானம் எனச்சோல்லி
தலையிடுகிறாய்!
மரணம்:
இல்லை
ஆணினம் உன்னை
தான மிடுகிறது
எனச்சொல்லி
முறையிடுகிறேன்!
மங்கை:
ஆண்மையின்
அதிகாரத்தினாலே
பெண்மை
மறு பிறவி எடுக்கிறது!
மரணம்:
இல்லை
ஆண்மை யின்
அகங்காரத்தினாலே
பெண்மை
பல தாரமாகிறது!...
மங்கை:
உன் சரீரம்
சவக்கணக்கு...
அதை சிதைத்து விடு!
மரணம்:
உன் சரீரம்
பாவக்கணக்கு....
அதை புதைத்து விடு!...
மங்கை:
நான்
கருவுற்றிருக்கிறேன்
அதனால்
ஜெயிக்கப்போகிறேன்!
மரணம்:
உன்னைக்கருவிலே
அழிக்கப்போகிறேன்..
அதனால்
நான்தான்
ஜெயிக்கப்போகிறேன்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பகுதி-2
மங்கை:
ஓ! மரணமே யென்
கருவை யழிக்க
போகிறாயா?
அப்படியாயின்....
இத்தருணம்முதலே
ஜனன மனைத்தும்
ஜீவ சமாதியிலே
சமையட்டும்...
இனி
உன் ஜீவன்
சமாதியின்றி
சிதையட்டும்....
இது என் சாபம்!...
மரணம்:
வேண்டாம் அம்மையே
வேண்டாம்!
உலக
ஜீவனை யெல்லாம்
ஒற்றை சமாதியில்
உயிர்பித்து வைத்தால்
உன்சாபம்,
விதியினும்
வலியதாகிவிடும்
உன் சாபம்
ஜீவ அழுத்தம்
தாங்காத பாவம்!.
மங்கை:
ஆம் ஆம்
என் சாபம்
சிவனின் உடலையும்
சிதைத்து விடும்
சிதையாத
உடலெல்லாம் சிவனாகிவிடும்!..
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
பகுதி-3
மரணம்:
விதிசொல்லி தந்தவனுக்கும்
விதி
எழுதிக்கொடுத்த
மதியாளே!
பாவமும் என்னில்,
சாபமும் என்னில்,
ஜீவனும் உன்னில்,
ஜீவத்தியாகமும்
உன்னில் என்று
நான் உணர்ந்தேன்....
மங்கையே!
என்னை
மன்னித்து விடு!..
இனி யிந்த
மண்ணைத்தொட்டால்
எனை
புதைத்து விடு!...
மங்கை:
அழிவுக்கு பயந்த
அற்ப்பனே!....
மரணம்:
நிறுத்து.
உன் பிரதாபத்தை....
யாரை
அற்ப்பன் என்கிறாய்
உன் சாபம் கண்டு
என் வேகம்
தீரவில்லை....
அதிலே
என்
விவேகம் உனக்கு
புரியவில்லை!....
தேகமோகம்
தீராத
மனித வர்க்கத்திலே
மரணம்
இல்லையெனில்,
உன்
ஜீவன்
சித்ரவதைப்படும்....
மோகத்தால்
உன் தேகம்
சின்னாபின்னமாய்
சீரழியும்...
ஈ மொய்த்த
கறிச்சதையாய்
ஆவாய்...
வெட்கித்தலைகுனிந்து
ஒருநாள்
நீயாக எந்தன்
சிதை தேடி வருவாய்!....
அது வரை
உனக்காய் நான்
காத்திருப்பேன்....
மங்கை
நான் நின் சிதை தேடி
வரும் முன்னே
என் விதையை இம்மண்ணில்
புதைத்து விட்டு தான்
வருவேன்....
அது மீணடும் முளைக்கும்...
சென்று வா....மரணமே....