நாம் எங்கே போகிறோம்

திருப்பதி உண்டியல்
திணறிட அளிக்கிறோம்,
திருப்பணி என்றால் தினப்படி அளக்கிறோம்.
பட்டினிச் சாவுகள்,
சேரிகள் கடக்கிறோம்
இதயத்தை இரும்பாக்கி இருட்டினில் தள்ளி.
மென்பொருள் எழுத
இராப்பகல் விழிக்கிறோம்,
காக்டெயில் மதுவில் கவலைகள் கொல்கிறோம்.
இரவுகள் அல்ல
நண்பகல் கூட
தனியே செல்லும் பெண்கள் குலைகையில்.
ஸ்கைப்பில் கண்பார்த்து
ஸ்கைவாக்கில் கைகோர்த்து
காபிக்கடைகளில் காதல் வளர்க்கிறோம்,
குறுஞ்செய்தி முதல்
குறிப்புகள் வரை
ஆங்கிலம் ஆக்கினோம் அருந்தமிழ் அலன்றிட.
பரந்து கிடக்கும்
விண் வெளியில்
தானியங்கிக் கலங்களால் பெயர் பொறிக்கிறோம்,
திறந்து கிடக்கும்
முள் வெளியில்
தானிங்கு பாதிபேர் மலம் கழிக்கிறோம்
குப்பை உணவுகளையும்
குளிர் பானங்களையும்
தன்னிலை மறந்து தாரமாய்க் கொண்டோம்,
வேப்ப மரத்தையும்
மஞ்சள் மணத்தையும்
துச்சமாய் நினைத்து தாரை வார்த்தோம்
அட!விடுதலை எதற்கு?
வேர்களை விடுக்கவா?
வெள்ளைத் தோலில்லா சில
வெள்ளையர்கள் பிறக்கவா?
எம்மொழியும் கற்றுக்கொள்வோம்-ஆனால்
வைத்துக் கொள்வோம் விருந்தாளியாய்,
எந்நாட்டுடனும் உறவாடுவோம்-என்றும்
தாய்நாட்டுக்கே உரமாவோம்