உணர்வுகளின் ஊர்வலம் போட்டிக்கவிதை-வித்யா
உணர்வுகளின் ஊர்வலம்.....!!போட்டிக்கவிதை-வித்யா
மழைத்துளிகள் சேர்த்து
கயிறென திரித்து
இதயங்களை இணைக்கும்
உணர்விதுவே...........!!
நிலவின் விதை எடுத்து
வீதிஎங்கிலும் தூவி
வீட்டுக்கொரு பிரபஞ்சம் என
ஏங்கிடும் உணர்விதுவே......!!
தென்றலில் கண்ணீரூற்றி
சுவரெங்கிலும் கிறுக்கி
மழலை வரையும் புதுச்சித்திரம்
தேடும் உணர்விதுவே........!!
மான் கொம்பில்
தொட்டில் கட்டி
தேனொழுகத் தாலாட்டி
உயிர் வளர்க்கும் உணர்விதுவே......!!
விழிகளெல்லாம் குருடாக்கி
இருட்டிற்கும் வெளிச்சம் தந்து
வன்மம் வீசி
இன்பம் பெரும்
உணர்விதுவே.....!!
மொழிகளெல்லாம் ஊமையாகி
மொழிபெயர்ப்பே தமிழென்றாகி
ஈடில்லா இன்பம் காணும்
உணர்விதுவே.........!!
சிற்றின்பச் சிறகொடித்து
பேரின்ப இல்லறம் பேணி
குப்பைத்தொட்டிக்கெல்லாம்
கருக்கலைத்து அனாதையின்
அர்த்தம் தொலைக்கும்
உணர்விதுவே......!!
மார்த்துளைக்கும் குண்டுகள்
உயிர்த்துளைக்கும் சதிகள்
விண்தொடும் கண்நீர்மட்டம்
மண்மூடும் உடல்களின் வாட்டம்
சொல்லும் உணர்விதுவே.......!!
பிச்சைத்தட்டுகளில்
இதயங்களும் சிறுநீரகங்களும்
கருவிழிகளும் தானமாய்த்
தேடும் உணர்விதுவே.......!
இன்னுமின்னும் நம்
உறங்கா உணர்வுகள்
ஊர்வலம் போகின்றன
பாடையிலும் பல்லக்கிலும்......!!
-வித்யா
firstyear ME (applied electronics)