புகைப்படலங்கள்

ஏதாவது ஒரு
இருட்டு மூலையில் இன்னும்
துகிலுரிக்கப்பட்டுக்
கொண்டுதானிருக்கிறது...
வெண்ணிற ஆடைகள்...!!

நரகாசுரன்
வீழ்ந்திருக்க வில்லை...!!

எண்ணெய் குடித்து
அசைந்தாடும் தீபங்களைப்
போலவே...
தள்ளாடித் தேடுகிறது
ஏற்றிய மனிதங்களும்.....!!

நரகாசுரனின்
குறைந்தபட்ச விலை 32 ரூபாய்..!!


மினுக்கல் விளக்கொளியில்
சிரிக்கும்
குழந்தைக்குப் பின்னால்
மின்னூட்ட எந்திரத்தின்
புகை குடித்து
திணறிக் கொண்டிருக்கிறது
மற்றொரு குழந்தை...!!

கண்டும் காணாமலிருக்க
நரகாசுரனுக்கு
நடிக்கவும் தெரிந்திருக்கிறது...!!

எது... எப்படியிருந்தால்
எனக்கென்ன...
என்னுடைய இன்றைய
தேவையானது....
ஒரு எண்ணை ஈரத் திரி...
பாஸ்பரஸ் தோய்த்தெடுத்த
ஒரு குச்சி....!!

விளக்கேற்றியோ..
வெடி கொளுத்தியோ
வீடு புக வேண்டும்...!!

என்னைப் போலவே
எண்ணெய் குடித்துச்
சிரித்திருக்கிறது
அப்போதுதான்
வெந்து விட்டிருந்த வடை....!!

நரகாசுரன்கள் தினசரி
ஐந்து காட்சிகளாகவோ
சிறப்புப்
பேட்டிகளாகவோ
உலா வரக்கூடும்.....!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (20-Oct-14, 1:09 pm)
பார்வை : 421

மேலே