எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம்ஒன்று -கவிஜி

மழை.....

"இது அடை மழையும் அல்ல..... அந்தி மழையும் அல்ல.... அவள் மழை......"

பிரவீன், ஹெல்மட்டைக் கழற்றி விட்டு, வானம் நோக்கி முகம் காட்டினான்.... வானம் தாண்டி குரல் உயர்த்தினான்....

"எவள் மழை.....ஓ...... அவ.... அட.. அந்த ஒட்றைக் குச்சி காயத்ரி மழையா..... உங்கள எல்லாம் இப்டி பேச யார்டா சொல்லித் தராங்க...."

கலாய்த்த நண்பனை ஓங்கி உதைத்த இன்னொரு நண்பன்......

" ஆமா இவரு பெரிய கவுண்டமணி...........அவரு மாரியே பேசறாரு.... அவனாது எழுதறான்..... நீ படிக்கவாது செய்றயா....... உங்கள மாரி நிறைய பேரு காமெடிங்கற பேர்ல நல்ல நல்ல காமெடியன்கள் பேரைக் கெடுத்துட்டு இருக்கீங்கடா....."

"டேய் நீ நிறுத்து.....நீ ரஜினி மாறி உன்னை நினைச்சுகிட்டு பண்ற அலப்பறைய முதல்ல நிறுத்து...அப்புறம் பேசு...." என்றவன் தலைவன் போல இருந்தான்....அவனே தொடர்ந்தான்.....

"அவன வம்புக்கு இழுக்கலேனா தூக்கமே வாராதே....என்றவன் இந்த மழை விடாது போல இருக்கு... மழையைப் பார்த்தா ஊட்டி போய் சேர முடியாது.. கிளம்புவோம்....." என்றான்.

அனைவரும் ஒரு முறை வானத்தை பார்த்து விட்டு.. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அன்னிச்சை செயலாக வண்டியை ஸ்டார்ட் செய்தார்கள்......

"அயோ மச்சான்..... நான் பிரவீன் வண்டில வரல.. உன்கூடயே வந்தறேன் என்றபடியே..... அவன் நீங்க திரும்பி வரப்போ தான் ஊட்டி கொண்டு போய் சேத்துவான்......" என்றதும் தலைவன் உட்பட அனைவரும் குபீர் என சிரித்து விட்டார்கள்.....

ஹெல்மெட்டுக்குள் சுருங்கிய புருவத்தில்.... சின்ன தலையாட்டலில் தனக்கு தானே சமாதானம் செய்வது போல மீண்டும் ஒரு முறை வானத்தை அண்ணாந்து பார்த்தான் பிரவீன்.....

முத்துத் துளிகள் முத்தம் பதித்தன....பதித்த முத்தத்தில் ஒன்று இதழ் பட்டு தெரித்தது..... சட்டென உள்ளுக்குள் ஒரு வித குளுமையை உணர்ந்தான்..... இந்த மழை..... இன்னும் இன்னும் என்னை செதுக்குகிறது...... எனக்குள் எதையோ பதுக்குகிறது..... காகிதம் தேடும் பழக்க தோஷத்தில்... பரபரத்த மனதோடு வண்டி சாலையை பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது....

மித வேகம்.... மித நன்று.....

சாலையோரம் சாய்ந்து நின்ற பலகையில்... நன்று அழிந்திருந்தது......... கண்ணுக்கெட்டும் தூரம் வரை நண்பர்களைக் காணவில்லை.....காணாமல் செய்த தூரம் வெகு தூரம் இல்லை.. இருந்தும் நெருங்க முடியாத சுதந்திர காற்றை ஆழமாக உள்வாங்கிக் கொண்டே கொண்டை ஊசி வளைவுகளை நேராக்கிக் கொண்டிருந்தான்....தன்னை விரித்துக் கொண்டே கீழ் நோக்கி பறக்கிறது வனம் என்றொரு சிந்தனை துளிகளாய் தொட்டு தடவி... பட்டு பரவி....... மனசெல்லாம் மெட்டமைத்துக் கொண்டிருக்க....கட்டமைத்த பறவை ஒன்று..... வானம் துளைத்துக் கொண்டிருந்த சில நொடிக் காட்சியை.... நிற்க வைத்து விட்டு கடந்து விட்டிருந்தான்...

கடக்க கடக்க கவிதையும்..... காற்றே...... பறக்க பறக்க பறவையும் பாட்டே.... மெய் மறக்க மறக்க பயணமும்.......................................................................................

என்ன முட்டியது..... ஏன் முட்டியது... எதற்கு முட்டியது.... ஒன்றும் புரியவில்லை.... கை கால் எல்லாம் சிராய்ப்பு.......

விஸ்வரூபம் துளி போல மீண்டும் காட்சியைப் பின்னோக்கி செலுத்த, வானம் துளைத்த பறவை பின்னோக்கி சுழலத் தொடங்கியது.....கண் இமை ஸ்லோ மோஷனில் கீழிருந்து மேல் நோக்கி பறவையைப் பார்த்து.. பின் கீழ் இறங்கும் மைக்ரோ நொடியில்.... ஒரு கார் .... அதிவேகமாக இவனின் பைக்கை லேசாக தட்டி விட்டு போனது.....

கார்......

ஒரு முறை தலையை சிலுப்பிக் கொண்டான்.... கழுத்தில் ரெண்டு நெட்டை வந்தன.... கொஞ்சம் ஆசுவாசப் பட்டது போல உணர்ந்தான்....

சிவப்பு கார்.....

"எதுக்கு இவ்ளோ வேகம்.... ஏன் இவ்ளோ வேகமா ஓட்டனும்..... கொஞ்சம் தவறி இருந்தா....... கீழ போயிருப்பேனே....!....." மனம் நடுங்கியது.......மனதுக்குள் வியர்த்ததை...... உரிந்து கொள்ள முடிந்தது..... புரிதலுக்கு.....

பறவை....வானத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது....அதன் அலகில், நீலம் ரத்தமாய் வடிவதாக இவன் கண்கள் விரிந்தன...ஹெல்மெட்டை சரி செய்தான்...... சரிந்து கிடந்த பைக்கை எடுத்து நேர் செய்தான்.... ஏறி அமர்ந்தான்......

பறவையை பார்த்தான் .... காணவில்லை.... புறப்படும் வரை தான் நாணின் விரல்...... புறப்பட்ட பின் அது வில்......

வளைவுகள்....... நிமிர்த்தப்பட்டன..... பாதை...... அங்கு இல்லாமல் போகத் தொடங்கியது ......

வேகம் வேகம்.. அதி வேகம்....... பட்டாம் பூச்சி தொட்டாலும் தீப் பிடிக்கும்......... பட்ட பூச்சிகளுக்கெல்லாம் பேய் பிடித்தன.....

அடிக்கின்ற மழை நெருப்புத் துளிகள்.......ரத்தம் முழுக்க யுத்த செல்கள்...... வித்தை தெரிந்திருந்தன மத்த செல்கள்....

விரட்டு.. விடாத....... முறுக்கமுறுக்க.... பாதை சறுக்க சறுக்க......பிரவீன்...... காற்றைப் போல உருவெடுத்தான்.......காற்றாகவே படையெடுத்தான்......

"அக்னி குஞ்சொன்று கண்டேன்.... அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்...... வெந்து தணிந்தது காடு.... தழல் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ..... தத்தரிகிட தத்தரிகிட.....தத்தோம்.....தத்தரிகிட....... தத்தரிகிட.....தத்தோம்,..........................................................

கனன்று கொண்டிருந்த..... வரிகள்........ காடெங்கும் ஒலித்துக் கொண்டே இருந்ததாக அவன் செவிகள்.... புவிகள் ஆண்டன....

கண் இமைக்க, துளி மறைக்க, கடந்தது காற்றாய்........

"அட... நம்ம பிரவீனு... எதுக்கு இவ்ளோ வேகமா போறான்........" -பரபரத்து படபடத்து யோசித்த நண்பர்கள்.. ஒருவரையொருவர் பார்த்துப் பேசி.. யோசிக்க.... "இல்லடா... அவன் எப்டி இவ்ளோ வேகமா....?"--------------------------------

"இல்லடா.... அவன் மாதிரிதான் தெரியுது .... கொஞ்சம் அழுத்துங்க.. என்னனு பார்த்திடலாம் ...." என்றான் தலைவன்.

"கொஞ்சம் மெதுவாவே போங்கடா..... சிவப்புக் காருக்காரன் ஒதுக்கிட்டு போனதே பக் பக்குனு இருக்கு" என்றான்.. பிரவின் கூட ஏற மறுத்த நண்பன்........

அந்த வளைவில்..... கொண்டாய் ஊசியை நிமிர்த்தியது போல படுக்கப் போட்டு மேல் எழும்பி முன்னால் மழை நீரை சாலையில் இருந்தது வெற்றிடத்தில் சர்ரென்று பீய்ச்சிட....... பைக்கை நிறுத்தினான் .....நின்றான்.......

பைக் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது...... சைலன்சரில் துளிகள் பட்டு சூடான ஆவி.... கோபமாய் அவர்களை சுற்ற தொடங்கியது.....காரை விட்டு இருவர் இறங்கினார்கள்.

"சாரி.....

"என்ன வெங்காய சாரி..... ம்ம்ம்..... கீழ படு........... கார மேல ஏத்திட்டு சாரி கேக்கறேன்.... நீ சரியான ஆம்பளையா இருந்தா இந்த திறமைய கார் ரேஸ்ல கலந்துட்டு காட்டு.... இந்தியாக்கு பதக்கமாது கிடைக்கும்....அத விட்டு, ஊட்டி ரோட்ல இவ்ளோ வேகமாய் போய் என்ன மாதிரி பொது மக்களை ஏண்டா சாவடிக்கறீங்க.....இவ்ளோ வேகமா வண்டி ஓட்டி யாருக்கு என்ன ப்ரூப் பண்ணப் போறீங்க ...... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு கியர் போடரக்கு இடது கை இல்லாம வெட்டி விட்றனுண்டா....ஒரு பொண்ணு கண்ணாடில அவ முகத்தைப் பாத்துட்டா போதும்.....என்னமோ உங்களைத்தான் பாத்து ஜாடை பண்றான்னு நீங்களா கற்பனை பண்ணிட்டு ரோட்ல தாறுமாறா வண்டிய ஓட்டி.... தறி கேட்டு யார் மேலயாது மோதி கொன்ற வேண்டியது.... பீஸை கட்டிட்டு வெளிய வந்தற வேண்டியது......... உயிரு என்ன மயிராடா..... போனா போகுது வளரும்னு சொல்ரக்கு..... அது வரண்டா........ வெண்ணைகளா.......... கேக்க ஆளு இல்லன்னு நினைச்சிடிங்களா...... இனி எல்லாம் விட முடியாது நண்பகர்ளே,...... ரூல்ஸை மதிக்கலனா போலிஸ்ட்ட எல்லாம் போக மாட்டோம்.. தூக்கி போட்டு மிதிப்போம்.... பாக்கறியா.... இங்கயே ரெண்டு பேரயும் அடிச்சு துவைச்சு கார இங்கிருந்து தள்ளி விடறேன் பாக்கறியா........"

பக்கத்து மரத்தில் இருந்த பறவை ஒன்று மெல்ல கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டது.....

"இனி 40 க்கு மேல போனீங்க.... பெட்ரோல் ஊத்தி காரை பத்த வெச்சிடுவேன் ... ஓடுங்கடா..."

மழை இன்னும் பலமாய் அடிக்க தொடங்கி இருந்தது.....காடு, மழையில் கரைந்து கொண்டிருந்தது..... பின்னால் வந்து கொண்டிருந்த நண்பர்கள் இன்னும் வந்து சேரவில்லை...... கண்களில் சாரல்கள், பொல பொலவென தண்ணீர் பூக்களைத் தூவிக் கொண்டே இருக்க, எதிர 10 அடி தூரத்தில் இருக்கும் பாதை கூட சரியாக தெரியவில்லை .....

மழையை விலக்கிக் கொண்டு ஒரு முகமூடி உருவம்.....மழைத் துளிகளால் செய்யப்பட்ட உடலாய் மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருந்தது..... கண்களை கசக்கி முகத்தில் வழியும் நீரை துடைத்து சரி செய்து கொண்டே.....இன்னும் உற்றுப் பார்க்க....

"நீங்க....... பிரவின் ஷீஜா....... ரைட்டர் .... ஏம் ஐ ரைட்......"

"ஆமா..... நீங்க......."-----------------------------------

நிமிடங்களில் பிரவின் ஷீஜா அங்கு காணாமல் போயிருந்தார்........

சற்று நேரத்திற்கு முன்.........




மழை....... .... இரண்டெழுத்து காதல்....

மலை உச்சி......பூமியின் உச்சம்.....காட்சி பிழை.... இருக்கட்டுமே..... கவிதை படம்.... காணட்டுமே....

மலை உச்சியில் தலையாட்டும் மரங்களின் பச்சைகளில்.....இச்சை மடிகள்.....

நேர்கோட்டு சிந்தனை சரிவான செறிவாய்....தொடர் ஓட்டப் பந்தயமென பார்க்கும் இடமெங்கும் பார்வைகள் விழக் கண்டாள்.
"கனா கண்டேனடி தோழி......" என்றொரு வரித் துளி ... விழி தேடி... வழியானது......நீரில் மிதக்கும் நந்தவனமாய் ஆரண்யம்....... ஆரண்ய நடுவில் செண்பகமாய் வித்யா...... ரசனைக்காரி..... ரசிக்கத் தொடங்கிய இடம் எங்கும் கவிதை நட்டி நின்று கொண்டு இருந்தாள்.... காடும் மலையும் படிப்பது வேறு.... பார்ப்பது வேறு....காடு வரைவது வேறு.... காட்டில் கரைவது வேறு... வேறு வேறாய்.... வேர் தேடி நின்று கொண்டிருந்தாள்.....பார்க்கும் இடமெல்லாம் பளீர் புன்னகையில் பச்சை நிற தேசம் பல பலவாய் பந்தலிட்டு செந்தமிழ் முணு முணுக்கும் விரிந்த கூந்தலாய், அலை அலையாய் அடுக்கி கொண்டு போவதில் மலர் தூவும் வெண்மேகம் அவள் ஆகையில்.... ஆகிய கணத்தில் ஆகையால் மழை ஆனேன் என்று கவிதையும் வடிப்பாளோ......!

"அம்ம்மா......... மழை... உடம்புக்கு ஒத்துக்காது......"

"உயிருக்கு ஒத்துக்கும்....."

"குடிசைக்குள்ள வந்துருங்க....

"நான் குடிசைக்குள்ள தான் இருக்கேன்..."

.....................................................

"மலை உச்சியே குடிசை மாதிரி தான் தெரியுது .... கடவுள், அதோ மேகத்துக்குள் பெருந்துளியாய் வந்து கொண்டிருக்கிறார்........"

குடிசைய விட்டு மெல்ல தலையை வெளியே எட்டிப் பார்த்த அந்த ஊர் பெரியவர்.... குடு குடுவென ஓடி வந்து அவள் சொன்ன துளியை மேல் நோக்கி பார்த்தார். சொட்டென்று விழுந்த துளியில் கடவுள சிதறி விட்டாரோ என்பது போல வித்யாவைப் பார்க்க....

வித்யா சிரித்துக் கொண்டே குடிசைக்குள் ஓடி வந்தாள்....

"இல்லம்மா... கடவுள்.... இங்க இருந்து நாலு வீடு தள்ளி இருக்கற ஊர் மரத்தில தான இருக்கார்... மழையில எப்படி...?

"மழையில மட்டுமல்ல.. இந்த மலை முழுக்க கடவுள் இருக்கார்... தாத்தா.... இங்க இருக்கற ஒவ்வொரு மரத்திலயும் கடவுள் இருக்கார்... ஒரு வீடு நல்லா இருக்கணும்னா அந்த நாடு நல்ல இருக்கனும்... அந்த நாடு நல்லா இருக்கணும்னா அந்த நாட்ட சுத்தி இருக்கற காடு நல்லா இருக்கணும்.... காடு கொண்ட நாடே வளமான நாடு.... அவ்ளோ பெரிய காட்டைக் காப்பாத்றது நீங்க...."

நானா.....

"ஆமா.... நீங்கன் னா நீங்க.. உங்க அப்பா.. அவுங்க அப்பா.. அவுங்க அப்பா.. அவுங்க அப்பா.... ....
.......................................................

"காலம் காலமா இந்தக் காட்டை உங்கள மாதிரி ஆளுங்க தான் காப்பாத்திட்டு வந்துருக்கீங்க... ஆனா உங்க அருமை புரியாத நாட்டு வாசிங்க உங்கள இன்னும் காட்டு வாசின்னு தான் சொல்றானுங்க... இந்த ஆரண்யத்துல நிறைய கனிமங்கள் இருக்கு... அதை எல்லாம் ஏதோ ஒரு வடிவத்துல மறுபடியும் வெள்ளைகாரனுக்கு விக்க அந்த நாட்டு வாசிங்க முடிவு பண்ணிட்டாங்க..... ஒரு கூட்ட நாட்டு வாசிங்களுக்கு கிரிகெட் கொள்ளைய வேடிக்கை பாக்கவே நேரம் சரியா இருக்கு.... இன்னும் ஒரு கூட்டத்துக்கு சீரியலும் சினிமாவுமே வாழ்க்கையாகி போய்டுச்சு ....வேற வழி இல்ல.... அதனால மறுபடியும் நீங்க தான் காப்பாத்தனும்.... மரத்தக் காப்பாத்தனும்... இங்க இருக்கற காத்தைக் காப்பாத்தனும்.. பறவைகளை காப்பாத்தணும்.... மழையைக் காப்பாத்தனும்...... பேசி பேசியே சிட்டுக் குருவிகள கொன்னுட்டானுங்க...... கோடிக் கணக்குல யானைத் தந்தமும்.. காண்டாமிருகமும்.... வியாபாரத்துல இருக்கு... மனுசன வித்தக் காலத்துல கூட பணம் மனுசன் கன்ட்ரோல்ல இருந்துச்சு... மரத்த விக்கற காலத்துல பணம் மனுசனக் கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிடுச்சு...."

"ஒண்ணும் விளங்கலையே..."

"உங்களுக்கு விளங்கலங்கறது தான்...நாட்டு வாசிங்களுக்கு திசையை காட்டுது காட்டுக்குள்ள வர... இங்க வருஷம் முழுக்க ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு மரமும் துளி துளியாய் சேகரிச்சு சேகரிச்சு சேர்த்து வைச்ச தண்ணி தான்... ஓடையாகி .. நதியாகி ஆறாகி.. கொட்டுது... எதைப் பத்தியும் யோசிக்காம வெறும் பணத்துக்கு அரசியல் பண்ணி அடிச்சிக்குரானுங்க...... நாட்டு வாசிங்க......"

"சரி நாங்க என்ன தான் பண்ணனும்...."?

"இது உங்க காடு.... நீங்க தான் காப்பாத்தனும்.... அடுத்த தலை முறை பூமில வாழனும்னா.... காடு உயிரோட இருக்கணும்.... வருவானுங்க.. சைட் போட்டு விக்கரதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு.. இப்போ நரகம் முழுக்க அடுக்கடுக்கா கல்லறை கட்டி முடிச்சுட்டானுங்க ... இனி மெல்லமா காட்டுக்குள்ள வருவானுங்க.... கொஞ்சம் கொஞ்சமா காட்டை அழிப்பானுங்க. ஏற்கனவே..... அந்த பங்களா இந்த பங்களான்னு ஆரம்பிச்சு அந்த மரம் இந்த மரம்னு சொல்லி... பாதிய அழிச்சிட்டாங்க.... மொத்தமும் போறதுக்குள்ள முழிச்சுக்கணும்.... எவனாது வந்து இங்க தொழிற்சாலை கட்றோம்... உங்களுக்கு சலுகை தரோம்னு சொன்னா......... எப்படின்னு கேள்வி கேளுங்க... கேள்வி கேக்கணும்னா முதல்ல படிக்கணும். படிங்க... அதுக்குத் தான் நான் புத்தங்கங்களோடு வந்துருக்கேன்....... .... படிப்புன்னா என்ன.. வாழ்க்கைன்னா என்ன.. ... பூமி எப்டி வந்துச்சு,.,, ஆகாயம்னா என்ன, பெரு வெளின்னா என்ன... கடவுள்ன்னா என்ன... காத்து எப்டி உருவாகுது... மனசுன்னா என்ன.... இதயம் எப்டி இயங்குது.... ஏன் நோய் வருது.... எல்லாம்......... எல்லாம் சொல்லித் தரேன்... மாட்டுப்பால் கண்ணுக் குட்டிக்கு தான்னு சொல்ற உங்க நாகரீகம் மட்டும் சுட்டுப் போட்டாலும் நாட்டு வாசிங்களுக்கு வராது.... பாக்கட்டுல பால அடைச்சு தினம் ஒரு ரேட்ல விக்கரவனுங்க அவுங்க....இன்னும் ஆழமா யோசிச்சா.... ஆதி மனுஷன் சொன்ன அறிவியல் இன்னைக்கு நாசால கூட கொஞ்சம் தான்....நிறைய மாத்தணும்.... அதுக்கு நீங்க யோசிக்கணும்.... இனி ஒரு துரும்ப கூட இங்க இருந்து எவனும் எடுத்துட்டு போக சம்மதிக்க கூடாது.... நீங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கும் வரை இனி விடாதீர்கள்..........."

அம்மா..... ம்மா......... வித்யாம்ம்மா........

----------------------------------------------------------

எங்க................ இங்க தான............ பேசிட்டு இருந்துச்சு.... என்னென்னமோ சொல்லுச்சே.... இந்த மாடுகளை புடிச்சு கட்டிட்டு வரதுக்குள்ள ஆள காணோமே....!....... எங்க போயிருக்கும்........சாமி மாதிரி வந்து சாமி ஆடிட்டு சாமி மாதிரியே மறைந்சிடுச்சோ................

முகமூடி மனிதன்.....முகமூடியை சரி செய்தபடியே.... மலை உச்சியில் இருந்து இறங்கத் தொடங்கினான்...


சற்று நேரத்திற்கு முன்.........



மழை....

"சனியன் இந்த மழை விடுவனாங்குதே..... மனுஷன் பொலப்ப கிலப்ப பாக்க வேணாம்....."-கீரைக்காரி இப்போது மழை விற்றுக் கொண்டிருந்தாள்....

"மழையோடு உன் காதல்...... துளியோடு என் சாதல்...."- ஒற்றை ரோஜாவின்.... உயிர் பிடித்து காதல் சொல்லும் காலம் நிறுத்த பார்வையில் கணிப்புகளோடு அவன் அமர்ந்திருந்தான்....

அவள்கள் நிறைய....

"மழை வரும் போதெல்லாம்..... விலை ஏறும் ஜன்னல் சீட்டு....." மனதுக்குள் எழுதி முடித்த சாந்தி....... எழுதாத கவிதைகளை மழைத் துளிகளுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்......

"தீக்குள் விரலை வைத்தால்..... கொஞ்சம் மாற்றி யோசி... நீர்க்குள் விரலை வைத்தாலும் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா...... அட.... கவிதை... கொட்டும் மழையா...... அய்யோ..... கொட்டித் தீர்க்கும் பிழையா...."

"பிழை சொல்லும் தத்துவத்தில் கலையாகிறது..... பிழையாகாத சிலை.... புரியாத புதிர் தேடும் விழிகளில்.. புரிந்தே கிடந்தது.... புரியாமை... எழுத எழுத தீரவில்லை.... மனதின் பக்கங்கள்....."

சாந்தி மெல்ல புன்னகைத்துக் கொண்டார்.... இன்று ஊரெல்லாம் மழை வேட்டை.. எனக்கு மட்டும் கவிதை வேட்டை..... உள் மனதில் சாரலடித்தது ....

சட்டென திறந்த ஜன்னலில் இருந்து முகத்தில் பட்ட சாரல் பேருந்துக்குள் அவர் பயணிப்பதை உணரச் செய்தது.....கவனம் சிதற வைத்த இன்னொரு வார்த்தையும், அவரை ஜன்னல் விட்டு திரும்பி பக்கவாட்டில் பார்க்க வைத்தது....

"நீ அக்க தங்கச்சி கூட பொறக்கல"

கொஞ்சம் எட்டிப் பார்த்தார்.. இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாற்பது வயதுடைய தோற்றம் உள்ள பெண்மணிதான் தன் பக்கத்தில் அமர்ந்த 18 வயது பையனைப் பார்த்து அப்படிக் கத்தினார்....... அடுத்த நொடியே தீ பட்ட விரல் என எழுந்து கொண்டான்.. அவன் தலையை அங்கும் இங்கும் திருப்பினான்.... அந்த சூழ்நிலையை சமாளிக்க, எப்படா அடுத்த நிறுத்தம் வரும் என்று பார்ப்பதாக அவன் முகம் வெளுத்துப் போனது.... அவனின் உடல் கூட கொஞ்சம் நடுங்கத் தான் செய்தது.... பேருந்துக்குள் இருக்கும் ஓட்டைகளில் மழை நீர் உள்ளே புகுந்து கச கசவென இருந்ததில்... ஒரு வித சல சலப்பும் பேருந்துக்குள் நிலவியது....

"இந்த மாதிரி பசங்களை எல்லாம் போலீஸ்ல புடிச்சு குடுக்கணும்.. "என்று கூறிய ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆணை பளார் என அறைந்தார்,.. சாந்தி....

சட்டென ஒரு நிசப்தம் பேருந்துக்குள்....பேருந்தின் கட முடா சத்தம் மட்டும் பின்னணி இசையாக உறுமிக் கொண்டிருந்தது....

"இவ்ளோ நேரம் நீ என்ன பண்ணேன்னு நான் சொல்லட்டுமே.... இல்ல பயந்து போய்.... என்ன பண்றதுன்னே தெரியாம நடுங்கிட்டு நிக்குதே இந்த பொண்ணு......... அதையே சொல்ல சொல்லட்டுமா...." என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்க்க, அந்த பெண் சாந்தியை அர்த்தத்தோடு பார்த்தாள்....

"இப்டியே ஆடு திருடுன மாதிரி எத்தன நாளைக்கு முழிக்கறது... சாத்து ரெண்டு சாத்து.." என்றார்....அதே அர்த்தத்தோடு.

கண்களில் காளி குடி புகுந்து கொண்டது போல.... பளார் பளார் என நான்கு அறை......

"நாயே,,.. இறங்கி ஓடுடா...." என்று கத்தினாள்.. அந்த பெண்...

அவன் ஓடியே போனான்....

பெண்கள் பக்கம் நெருங்கி அணைத்துக் கொண்டு நின்ற சில ஆண்கள் மெல்ல பின் வாங்கினார்கள்....

"போடு அப்டி.... நான் ஒருத்தன் எத்தன பேரத்தான் கவனிக்க முடியும்.... நடத்துனர்.... ரை ரை என்றார்.....

சற்று முன்னாள் சென்று அக்கா தங்கச்சி கூட பொறக்கல என்று கேட்ட பெண்ணிடம் நின்று..... "ஏம்மா.... நீ அண்ணன் தம்பி கூட பொறக்கலையா.... உன் கடைசி தம்பி மாதிரி இருகான்.. இவன் உன் கூட உக்காந்தா உன் கற்பு கேட்டுப் போய்டுமா......?...சொல்லும்மா.... நீ நினைக்கற கலாச்சாரம் இது இல்ல... நீ நினைக்கற நாகரீகம் இது இல்ல... கற்புங்கறது.... உடம்புல இல்ல,... மனசுல இருக்கு....ஒரு ஆண் பெண்ணையோ ஒரு பெண் ஆணையோ மனதால் தவறாக நினைத்தாலே அது விபச்சாரத்துக்கு சமம்னு பைபிள் சொல்லுது..... இப்போ நான் கேக்கறேன்.." என்று அந்த பையனிடம் திரும்பி -"தம்பி, நான் உன் சித்தி மாதிரி .. என் மேல சத்தியம் பண்ணு.... நீ இந்த அம்மாவ தப்ப பார்த்தயா.........?"

பேருந்து ஒரு குலுங்கு குலுங்கி நிமிர்ந்தது.... அனைவரும் ஆவலுடன் எட்டிப் பார்க்க அவன், சாந்தியின் தலையத் தொட்டு "இல்ல சித்தி.. நான் எக்ஸாம் பத்தி யோசிச்சிட்டு தான் உக்காந்துட்டேன்.. நான் இவுங்கள அப்படி எல்லாம் நினைக்கல..."என்றான் கலங்கிய கண்களுடன்....

"மனுசனுக்கு நம்பிக்க முக்கியம்ம்மா..... நான் அவன நம்பறேன்..."-என்றார் சாந்தி... தீர்க்கமாக ....

பேருந்துக்குள் இருந்தவர்களும் "நாங்களும் நம்பறோம் என்று கத்தினார்கள்...."

"அப்போ தப்பு உன் மைண்ட்ல தான் இருக்கு.....மாத்திக்கோ...... " என்றபடியே, பேருந்தே கை தட்ட தான் இறங்கும் இடமும் வர பேருந்தை விட்டு இறங்கி சென்றார்... சாந்தி.....

பின்னாலேயே இறங்கிய ஒருவன் "மேடம் நீங்க எழுத்தாளர் சாந்தி தானே... உங்க ஆட்டோக்ராப் வேணும்.. கலக்கிட்டீங்க" என்றபடியே நெருங்க.... வேகமாய் ஒரு கார் வந்து நின்றது.... உள்ளே முகமூடியில்.... நனைந்திருந்த அவன்.... சிரித்திருக்க வேண்டும்... முகம் அசைந்தது...........

சற்று நேரத்திற்கு முன்....


கவிஜி

தொடரும்......



கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Oct-14, 10:55 pm)
பார்வை : 301

மேலே