உண்மை தீபாவளி
பற்று(ம்) அழுக்ககற்றி
நற்றுணர்வில் நீராடி
(அ)கந்தை ஆடை தள்ளி
அன்பெனும் புத்தாடை சூடி
நல்லெண்ண விளக்குகளால்
உள்ளெங்கும் ஒளியேற்றி
உலகும் உள்ளுயிர்யாவும்
உவப்புமிக வாழ்த்தி
நலமெனும் ருசிமிகு
நற்சொற் பலகாரம்
தானுண்டு மற்றோர்க்கும்
தாராளமாய்த் தந்து
சிரிப்பு மத்தாப்பு
சீர்வாழ்த்து சரவெடிகள்
குறையா அன்பொளி
நிறைவாய்ச் சிந்துவாணம்
ஆசையுடன் கொளுத்தி
அனைவரின் அகமலர
நேசக்கரங் குலுக்கி
நிறைவாய்க் கொண்டாடிடுவோம்.
வறியோருடன் பகிர்ந்து
செறிவுற மகிழ்வோம்.
புரிதல் மிகவாகின்
பூரிக்கும் மனிதம் தானே.