முதுகெலும்பி 6

எங்க ஊர்ல ஒரு புளியங்கூடு இருக்கும்.... புளியங்கூடுன்னா என்னடான்னு புதுசா பாக்காதீக. மூணு புளியமரம் கிட்டக்கிட்ட இருக்கும்... அது மூணையும் சேத்து சுத்தி கோடு வரைஞ்சோமுன்னா.. அது ஒரு பெரிய முக்கோணம் மாதிரி இருக்கும். அதத்தா எங்க ஊருல புளியங்கூடுன்னு சொல்லுவோம். அறுத்துக்களைச்சி.... வெதச்சி மொளைக்க பொறுத்த காலத்துல எல்லாம் இதுதே நாங்க கூடுற எடம்.

நல்லா எருமமாட்டு காலு மாதிரி இருக்க வசமா இருக்குற ஒவ்வொரு வேராப்பாத்து ஒவ்வொரு ஆளும் உக்காந்துகிருவம்.....! அங்க நடக்கும் பாருங்க கத.... குத்தவச்சி இருந்து ஊருக்கத பேசுறது எம்புட்டு சொகந் தெரியுமா...?

போனவாட்டி நம்ப ஓடுநண்டுக்கு காசு குடுத்தாருல்ல.. மாரி சித்தப்பா.. அவருதே எங்க ஊருக்கு கதைசொல்லி. ...
மாரி சித்தப்பா.... கூடி கொறச்சி பாத்தா அவருக்கு ஒரு நாப்பத்தஞ்சி வயசு இருக்கும். என்ன காரணமுன்னே தெரியல.. அவரும் கலியாணம் பண்ணிக்கிறல. எங்க ஊருல இருக்க எல்லா பெரிய ஆம்பள பொம்பளயும் அவரு அண்ணே... அத்தாச்சின்னுதா கூப்பிடுவாரு. அதனாலேயே எங்க எல்லாருக்கும் அவரு சித்தப்பு... சித்தா... சித்தப்பா.. இப்படி பல மாதிரி...
தண்ணி டேங்கடில ஒரு சின்ன கீத்து கொட்டிக. அதுதா அவரு தங்குற தூங்குற எடம். யாராவது தீவாளி பொங்கலுக்கு அவருக்கு சட்ட வேட்டி எடுத்துக் குடுப்பாக . யாராவது காசு குடுத்தா சேத்து வச்சிக்கிருவாரு. யாரு வீட்டுல என்ன விசெசமுன்னாலும் ஆளுக்கு முன்னாடி போயி தண்ணி தூக்குறது வாழ மரம் கட்றது... சேரு பெஞ்சி அள்ளியாந்து போடறதுன்னு எல்லா வேலையும் செய்வாரு.
எப்ப பசிச்சாலும் யாரு வீட்டுக்காவது போயி “ அத்தாச்சி.. என்ன கொழம்பு வச்சீய?... ரெண்டு பருக்க இருந்தா போடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்புடுவாரு. இப்படியா எங்க ஊர தத்து எடுத்துக்கிட்ட மனுச.

நாங்க பயலுக எல்லாம் புளியங் கூட்டடில உக்காந்திருக்கும்போது மட்டும் எங்ககிட்ட வந்து நல்லா கேலி கிண்டலா பேசுவாரு. இவரோட நையாண்டிக்கு எவனும் ஈடு குடுக்கவே முடியாதுங்க.....!! அப்பிடி பேசுவம்... நேரங் காலந் தெரியாம...

ஒவ்வொரு பயலுக்கும் பட்டப்பேரு வப்பாரு பாருங்க. “டேய் குஞ்சிலி புருசா... இவம் பெரிய எழுத்துக்காரனா வருவாம் பாரு..ன்னு நோட்ட தூக்கிகிட்டு போற சின்னப்பயல வம்புக்கிழுப்பாரு. அவம் மொறச்சா..” என்னவாம் மொறப்பு... இரு ராத்திரி வந்து உஞ்சோத்த புடுங்கி தின்னர்றேம் ன்னு உருட்டி முழிக்க . அவம் கலவரமாகி ஓடிருவான். இவரு வக்கிற பட்டப் பேருக்காகவே இவரச்சுத்தி நாங்க பலபேரு எப்பவுமே உக்காந்து இருப்பம்...

சீப்பிசாமி – புளியம்பழம் திங்கிற சின்னப்புள்ள..
நத்தையன் – வெக்கப்படுற பயலாம்...
கொடியாட்டி – கோமணம் தொவைக்காத தாத்தா
ஆட்டுத்தாடி – குளுருக்கு பயந்து குளிக்காம விட்டபய...
இப்பிடியா பேசிக்கிட்டே இவரு வக்கிற பேருக்காகவே இவரச் சுத்தி நாங்க கெடப்போம். அப்பறம் மரத்தடிலையே பளிங்கி வெளையாட்டு. இப்ப இருக்கிற பெருமொதலாளிமாருகளுக்கே சூதாட்டம் சொல்லிக் குடுப்பாரு.
“டேய்..இவம் செயிக்கிராம்... இவந் தோக்குறாம்.. அஞ்சி புளியம்பழம்”.ன்னு மாசி புடிப்பாரு.. மாசி புடிக்கிறதுனா பந்தயம் கட்றது. இப்ப உள்ளவுகளுக்கு புரியிற மாதிரி சொல்லணுமுன்னா பெட்டு கட்றது.. என்ன அதிசியமுன்னே தெரியாது. இவரு வாயில இவந் தோக்குறாம் ன்னு விழுந்தா அவஞ் செயிக்கவே மாட்டான்.

அப்பறம் கத....
“டேய்.... பயலுகளா.. இந்த ஆட்டுத்தாடி இருக்காம் பாரு. முந்தா நாளு மத்தியானம் கொல்லைக்கி போயிருந்தேம்.. அந்தூருப் புள்ள வந்திருந்தா...இப்பதா தண்ணி நிப்பாட்டிப் புட்டாகள்ள.. இவுக ரெண்டு பேரும் வாய்க்கா குழிக்குள்ள உக்காந்துட்டாக..”

“ சித்தா.. சும்மா புளுகித் தள்ளாதீக...என்ன பட்டப் பகல்லையா....?”

“அட.. ஆமாடா...கொஞ்ச நேரங் கழிச்சி இந்த புள்ள மொனகி எந்திரிச்சிக்கிட்டே ஓடிருச்சு.. ! இவேனும் வந்தாம்....

என்னடா தம்பின்னேம்... “

“இல்ல சித்தா.... வந்தாளா... முள்ளு குத்தி தடுமாறி வாய்க்காக்குள்ள விழுந்துட்டா... முள்ளு எடுத்து விட்டேன்... ஓடிட்டா..” அப்பிடின்னு கூசாம சொல்றாண்டா.

எவ்வளவு நேரம்னேன்... “ போடா... பொசக்...... ன்னு மட்டு மரியாத இல்லாம பேசிட்டு போறான்டா இந்த ஆட்டுத்தாடிப் பய.. இந்த மயிலு தோக வச்சிருக்குமுன்ன ஒரு சாமி... எப்படா அந்தாளு ஒலகத்த அழிப்பாரு...?” இப்பிடியே நீட்டி மொழக்கி நேரந் தெரியாம பேசிக்கிட்டே இருப்பாரு. ரசிக்கிற மாதிரியே இருக்கும்.

இம்புட்டு பொறணி பேசுனாலும் மாரி சித்தப்பு... எங்க ஊரு பொம்பள ஆளுகள மட்டும் எதுவும் சொல்ல மாட்டாரு. அவுக வயசு ஒத்த ஆளுக வந்து ஏதாவது நேரப்போக்குக்கு வாய இழுத்தாக்கூட........

“போண்ணே.... ஒனக்கு இன்னைக்கி வேல இல்லையா..? ஏம் இப்பிடி பொல்லாப்பு பேசுற.. அந்த அத்தாச்சியப் பத்தி.... அவுக சாமிண்ணே .. நாக்கு அழுகிரும் ஒனக்கு.. போயிரு”ன்னு திட்டுவாரு.

நாம கேட்டமுன்னா... “டேய் .. ஒங்க கூட பேசுறது வேறடா... நீங்கல்லாம் எளந்தாரிப் பயலுக... எனக்கு ஊடும் இல்ல..வாசலுமில்ல..நா எப்பம் போயி நின்னாலும் எனக்கு சோறு போட்டு காப்பாத்துது இந்த ஊரு மகராசிங்க.. இவுகள பத்தியெல்லாம் எம்வயசுல உள்ள ஒருத்தம் கேக்குறான்னா.. அவெம் மனசுல நெசமாவே தப்பு இருக்குடா... அவெம் குடுக்குற ரெண்டு வெத்தலக்கும் பொயிலக்கும் நா அவனுக்கு ஒத்து ஊதுனமுன்னா... நாஞ் சாப்புடுறது சோறு இல்லடா. வேற....! நாயி நன்றி மறக்காதுடா.. இந்த ஊருக்கு பேசிக்கிருக்கும் நாயி நா... ன்னு தழுதழுப்பாரு...

அடுத்த நிமிசம்..” அடப் போடா.. என்னைய ஒடச்சிப் பாக்காத.... இந்தா.. டன்டக்கு.. டன்டனக்கு... டன்டக்கு.. டன்டனக்கு... இதுலயே அடி.....

"நெல்லுக்கட்டு தூக்கிவரும்
நெறஞ்ச ஒந்தன் ம்ம்ம்ம்மொ.....கத்தக் கண்டு
நிறுத்தி வச்சிக் காத்திருப்பெம் புள்ள
நீலச் சீல கொசுவக்காரி....

குமிஞ்சி நிமிந்து கூந்தக் கட்டி - நீ
தவுடு கொழைக்கும் அழகக் கண்டு
கெறங்கிப் போகும் எம்மனசு – புள்ள நீ
கரைச்சிவிடுற தவுட்டுத் தொட்டில... ன்னு .....அடிக்கு மாறாம பாட்டுக்கட்டி வஞ்சனயத்து சிரிப்பாரு..

புளியங்கூட்டு கச்சேரில பசி மறந்து போயிருக்கும்....
(இன்னும்..... ஓடும்)

எழுதியவர் : நல்லை.சரவணா (21-Oct-14, 7:35 pm)
பார்வை : 156

சிறந்த கட்டுரைகள்

மேலே