தொடர்கின்றேன் என் கவிதைகளை

நீங்காத நினைவுகள் நெஞ்சினிலே
தேங்காத நேரமில்லை என்னிடமும் !
​மகிழ்ச்சி வெள்ளந்தான் மனதினிலே
புகழ்ச்சி மாலைகள் விழுந்ததாலே !​

நினைத்து பார்க்கின்றேன் ​நாளும்நான் ​
நனைந்து உலர்கின்றன இமைகளும் !
முடிந்த​து பணி​யென ​ ​நினைத்திட்டேன் ​​
​கடிந்த மனசாட்சியோ தொடர்க என்றது !

படைத்திட்ட கவிதைகள் வித்தானதா
வடித்திட்ட வரிகளும் வலிவானதா
படித்திட்ட உள்ளங்கள் ​உரமேறியதா
தவித்திட்ட நெஞ்சங்கள் தரம் மாறியதா ​!

​எழுகிறது எண்ணங்கள் வண்ணமாய்
விழுகிறது நெஞ்சில் சிறு துளிகளாய் !
அள்ளித் தெளித்திடத் துடிக்கின்றேன்
துள்ளி விளையாடிட நீங்களும்தான் ​!

​அசையாத அடித்தளமே இருந்தாலும்
இசையாத இதயங்கள் இவ்வுலகிலே !
வசைபாடும் வாய்களே வாழுதிங்கே
ஓசைகளே எத்திசையும் என்றுமிங்கே !

சமதர்ம சமுதாயமே என் நோக்கம்
சமூகநல மாற்றமே என் தாக்கம் !
உள்ளளவு படைத்திடவே என் ஏக்கம்
உள்ளத்தைத் தைத்திடும் என் ஆக்கம் !

தொடர்கின்றேன் என் கவிதைகளை
படர்ந்திடுவேன் உங்கள் உள்ளத்தில் !
எழுதிடுவேன் தொய்வின்றி உள்ளவரை
தொழுகின்றேன் அன்பான உள்ளங்களை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Oct-14, 8:04 am)
பார்வை : 105

மேலே