உணர்வுகளின் ஊர்வலம்

இன்று மழைப்பூக்கள் சிதறலாம்
நல்லவேளை குடை மறந்தேன்

பார்வைக்கு மாற்றாய் வாங்கிய வரமென
செவி நிறைக்கும் இசை ஞானம்
சாலையோர சிறுவனின் விரலசைவில்
குறையொன்றுமில்லை நமக்கு

முந்தியில் குழந்தையை ஒளித்தபடி
நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி
ஏனோ பிச்சையிட மனமில்லை
இன்னும் இந்தியா வளர வேண்டும்

அவசர போக்குவரத்தில்
நொடி நேர திகில் தரும்
ஒலிப்பானை அலற விடும்
இளைஞனைப் பிடித்து
நாகரீகம் பழக்க சினமுண்டு

முச்சந்திப் பிள்ளையாரிடம்
சிறு வேண்டுதல் இன்று
முகூர்த்த நாளாய் இருக்கட்டும்
பூக்காரப் பாட்டிக்காக

உறக்கம் தொலைத்த
கண்களில் பள்ளிச் சுமை தாங்கும்
பட்டுக் குழந்தைகளின் திறக்காத
மௌனங்கள் உடைபட்டு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்

அடடா!இன்று விடுமுறை
இதய சலசலப்பினால்
கவலைகளைக் காணவில்லை

இதழோரம் குவியும்
வெட்கம் கலந்த புன்சிரிப்பு
எதிரினில் உன் சாயல்

உன்னை நினைக்கும் நொடிதனில்
பற்றி எரிந்தது மஞ்சள்
பச்சையாக மாறுவதற்குள்
புறப்பட வேண்டும் நான்
இன்றைய நாளை என் வசமாக்க

இதயம் தாங்கிய நுண்ணுணர்வுகள்
ஊர்வலம் போக நாளை
திரும்பவும் சந்திப்போம்
மற்றுமொரு சாலைச் சந்திப்பினில்!!


A .karthika,
First year M .E (Applied Electronics ) ,
Nandha Engineering college ,
erode -52.

எழுதியவர் : கார்த்திகா AK (25-Oct-14, 7:37 pm)
Tanglish : unarvukalin oorvalm
பார்வை : 427

மேலே