ஹிஜ்ரத்து காதை

***இன்று முதல்முதலாய் 200 பேர் கூடி இருந்த மேடையில் நானே வாசித்த இஸ்லாமிய புத்தாண்டு கவிதை ****

ஹஜ்ரத்து வந்தாரு
ஹிஜ்ரத்துனு சொன்னாரு
அது என்ன சுன்னத்து ?
அறிவோட நான்கேட்டேன்

முறைச்ச ஹஜ்ரத்து
சிரிச்சுகிட்டே சொன்னாரு
சுன்னத்து இல்லேபா -நம்
எண்ணத்த மாத்தி
ஜன்னத்த காட்டவந்த
அண்ணல் முஹம்மதரு
பக்காலேர்ந்து யத்ரிபுக்கு
பக்கரையும் கூட்டிகிட்டு
மக்குப் பயலுவ கைலே
சிக்காம போனாரே
அதுதான்பா ஹிஜ்ரத்து !...

பக்கான்னா என்னான்னேன்
மக்காவின் பழைய பேரு ..
யத்ரிபுன்னா என்னான்னேன்
மதினாவின் பழைய பேரு ..
பக்காவான விஷயம்!
இது தெரிஞ்சவங்க
எத்தன பேரு ?
facebook ல போட்டுறனும்
friends எல்லாம் கேட்டுரனும்
மனசுக்குள்ளே நினச்சுகிட்டேன்!...

எதுக்குங்க போனாரு?
படக்குன்னு நான்கேட்டேன்
அல்லாஹ் ஒருத்தன்னு
அங்கங்க சொல்லி வச்சு
எல்லா மனுசருக்கும்
இஸ்லாத்த எத்திவச்சு
சிலைவணக்கம் வேணான்னு
சீர்திருத்தம் சொன்னதால ...

பாவி பயமக்க
பக்குவமா கூடி பேசி
ஆவி பறிச்சிவிட
ஆத்திரமா கிளம்பிடவே
அல்லாஹ் அறிவிக்க
அவர்கிளம்பிப் போனாரு

பயந்து போனாகளோ?
பயந்துபயந்து நான்கேட்டேன்
ஆமாம்பா!,...
உண்மைவழி இஸ்லாத்தின்
உயிர்போகும் எனபயந்து
நன்மையான ஹிஜ்ரத்தில்
நபிகிளம்பிப் போனாரு

போனதால ஆனதென்ன ?
புரியும்படி சொல்லுங்களேன்...

இருந்தஇடம் ஏத்துக்கல
ஏகத்துவம் ஒத்துக்கல
நம்பிவந்த கொஞ்சபேரும்
பட்டதுன்பம் கொஞ்சமில்ல !
மாறிப்போனா மாற்றம்வரும்
மனசுக்குள்ளே நினைச்சாரு
ஊரைவிட்டு உறவைவிட்டு
உண்மைகாக்கப் போனாரு

போகும்போதும் பின்னால
சாகும்வரை விடமாட்டோம்னு
வேகாத பயலுவதான்
விடியவிடிய தேடுனாங்கே

அல்லாஹ்,
பகைக்கண்ணில் சிக்காம
குகைக்குள்ளே ஒளிச்சுவச்சான்
சிலந்திவலை பின்னவச்சு
சிறந்தசதி செஞ்சுவச்சான்
வேறுதிசை தேடிஅந்த
வேடர்கள ஓடவச்சான்...

பக்கத்துல பக்கரு
பாவம் வயசானவரு
பயப்படுற மாறி தெரிய
கவலை வேண்டாம் நண்பா!
அவலம்வரப் போரதில்லே
நீங்க நானும்சேர்ந்து
ரெண்டுபேரு மட்டுமில்லே,
மூனாவதாய் அல்லாஹ்
முழுத்துணையாய் இங்கிருக்கான்!!
ஆறுதல சொன்னாக
அண்ணல்நபி முகம்மதுவும்
இப்படியே சிலநாளில்
மதீனாபோய் சேர்ந்தாங்க

அங்கஉள்ள தங்கமக்க
அனுசரிச்சி ஏற்றாங்க
அனுசரிச்ச காரணத்தால் -அவுகள
அனுசாரிநு நாமசொல்றோம்

அதுக்கப்புறம் பொறந்ததுதான்
அழிவில்லா நம்ம வழி
எதுக்குமே பயப்படாம
எதிர்த்துநிற்கும் நல்ல வழி

சொல்லிவிட்டு ஹஜ்ரத்தும்
தள்ளிநகர்ந்து போனாரு
உள்ளுக்குள்ளே எனக்குஒரு
வெள்ளப் பெருக்கெடுத்துடுச்சு

என்பாட்டன் உன்பாட்டன்
இப்படித்தான் கடல்கடந்து
இருநூறு வருஷம் முன்ன
இங்கவந்து சேர்ந்தாங்க

வியாபாரம் செய்யவந்து
காசுபணம் சேர்த்தாங்க
அப்பப்போ இஸ்லாத்த
அழகா சொல்லி வச்சாங்க

ஊரும் வளந்திருச்சு -இந்த
ஊரும் வளந்திருச்சு
வளர்த்ததில அவங்க பங்கு
வார்த்தசொல்லி முடியாது

நானும்தான் இங்கிருக்கேன்
நீயும்தான் இங்கிருக்கே
மீசைதாடி இல்லாம
வேறென்ன வளர்த்துபுட்டோம்

அதுகூட தானாக
அதுபாட்டுக்கு வளர்கிறதே!
அங்கங்கும் நூறு சங்கம்
எங்கெங்கும் முளைக்கிறதே!

ஏன்பா என்னாச்சு ?!
நீங்க சங்கம்வைக்கும் சங்கதிய
எங்களுக்கும் சொல்லுங்க

ஊர்பேரில் பத்துசங்கம்
உறவோடு பத்துசங்கம்
பேர்போட பத்துசங்கம்
பெருசுசிறுசா இன்னும்பத்து

பிரிஞ்சிருக்கும் மனுசங்கள
புரிஞ்சிருக்க சொல்லி தந்து
நிறைஞ்சிருக்கும் ஒற்றுமையில்
நடத்தஒரு சங்கமுண்டா?
கஷ்டப்படும் ஏழைகள
காசுதேடும் வழியசொல்லி
இஷ்டப்படி வாழவைக்க
இங்கஒரு சங்கமுண்டா?

சங்கம்னா சங்கமம்தான்
பங்கம்வரும் தனிச்சிநின்னா
இங்கிருக்கும் பெரியவுகளே
எங்களுக்கும் சொல்லித்தாங்க

நான்புரிஞ்ச ஹிஜ்ரத்த
நயமாக சொல்லிப்புட்டேன்
தப்பிருந்தா மன்னிக்கணும்!
இதிலுள்ள நல்லவற்றை
தவறாம எண்ணிக்கணும்!

எழுதியவர் : அபி (26-Oct-14, 2:23 am)
பார்வை : 175

மேலே