இவ்விரவில்

ஜன்னல் காற்று உன்னை தாண்டி
என் மேல் மோதியதே!
மாலை மேகம் இருளை நோக்கி
மெதுவாய் போகிறதே!

அச்சம் கொண்டு வார்த்தை எல்லாம்
பின்னால் ஓடியதே!
பயணச்சீட்டில் மல்லிகை வாசம்
இன்னும் வீசியதே!

சாலை மரங்கள் மெதுவாய் நகராதா?
இந்த சக்கரங்கள் மெதுவாய் சுற்றாதா?
இந்த மைல் கற்கள் மெதுவாய் வாராதா?

சரியா? தவறா? தெரியவில்லை.
இயல்பாய் இருக்க முடியவில்லை.
வயதின் வரம்பும் புரியவில்லை.
வலியை தாங்க முடியவில்லை.

இவ்விரவில் நான் உன்னோடு பயணம் செய்கிறேன்.
இவ்விரவில் நான் உன்னோடு பயணம் செய்கிறேன்.

சாலை விளக்கின் மஞ்சள் ஒளி
உன் மேல் பாயும் ஜன்னல் வழி
அதை பார்க்கும் எந்தன் விழி
மயங்காதோ சொல் கிளி!!

இருக்கையின் இடைவெளி கண்டு வெதும்பினேன்.
நம் இரு கைகள் இணையாதா என்று புலம்பினேன்.
உன் முகம் பார்த்து உண்மை சொல்ல தேம்பினேன்.
நீ நட்பை முறித்தால் என்னாவேன் என்று ஏங்கினேன்.

இவ்விரவு சிறிதாய் போய்விடுமோ?
விரைவாய் பேருந்தும் சென்றிடுமோ?
என் காலை இயல்பாய் விடிந்திடுமோ?

இவ்விரவில் நான் உன்னோடு பயணம் செய்கிறேன்.
இவ்விரவில் நான் உன்னோடு பயணம் செய்கிறேன்.

அவள் திசையினில் முகத்தை திருப்பி
மெல்லிசையினை என் செவியில் புகுத்தி
கண் அயர்வாளா என ஏங்கினேன்.
கண் அகலாமல் நோக்கினேன்.

இன்றும் மௌனமாய் போக்கினேன்
எப்பவும் போல் எனை சாடினேன்.
இன்னும் சிறிது இரவையும்
உன்னை பார்த்து கொண்டே போக்கினேன்.

சரியுதா என் காதல்
என நான் நடுங்க,
சரிந்து என் தோள்
மேல் அவள் சாய,
உடல் உருக,
கேசம் வாசம் நாசியில் தூறுதே!
என் வெட்கம் என்னை நோண்டுதே!

விடியாதே இரவே.
முடியாதே சுகமே.
எழாதே அழகே.

சாலையில் பள்ளம் வந்திடுமோ?
எங்காவது வண்டி நின்றிடுமோ?
அவள் தூக்கம் கலைந்து விட்டால்
கவிதை பாதியில் நின்றிடுமோ?

இவ்விரவில் நான் உன்னோடு பயணம் செய்கிறேன்.
இவ்விரவில் நான் உன்னோடு பயணம் செய்கிறேன்.

எழுதியவர் : SATHYATHITHAN.A (28-Oct-14, 6:39 pm)
சேர்த்தது : SATHYATHITHAN.A
பார்வை : 328

மேலே