நிலாப் பொழுது - ரகு
அழகானப் பூவொன்று சிரிக்கும் - அது
..........அன்பே உன்பேர் சொல்லி அழைக்கும் - என்றும்
விலகாத வசந்தத்தின்
..........விழிகொண் டுன்னைப்
....................பார்க்கும் - எனக்குள் - வேர்க்கும்
நிலவொன்று நடந்துவரக் கண்டேன் - அந்த
..........நிலவோடு நிழலாகிச் சென்றேன் - நீ
புலர்கின்ற பொழுதின்
..........பனித்துளி தான்
....................என்றேன் - புன்னகை - வென்றேன்
கடல்மீது சேராத நதியோ - நான்
..........கார்முகிலில் சிறைபட்ட மதியோ - காதல்
வடம் போட்டிழுக்க
..........வசப்பட்டதார் செய்த
....................சதியோ - இதுதான் - விதியோ
எத்தனைநாள் இப்படியேக் கழிப்பேன் - உனை
..........எதிர்கண்டால் பேசாது விழிப்பேன் - காதல்
பித்தனாகிப் போனதனால்
..........பாயிரைத்து உன்மீது
....................தெளிப்பேன் - நானும் - குளிப்பேன்
நினைவுகள் ஒவ்வொன்றாய்ச் சேர்த்தேன் - ஒரு
..........நிலப்பொழுதில் மனதோடுக் கோர்த்தேன் - எள்
முனையளவும் சிதறாத
..........முழுநிலவு நேரத்திலும்
....................வேர்த்தேன் - உனைஎதிர் -பார்த்தேன்
காற்றோடு சேராத வாசம் - உன்
..........கூந்தல்மீது கொண்டதொரு நேசம் - குளச்
சேற்றில் பூத்திருக்கும்
..........செங்கமல மென - விழி
....................பேசும் - கண் - கூசும்
ஆழ்ந்து உறங்குகின்ற போதும் - எந்தன்
..........அடிமனதில் உன்நினைவுகள் மோதும் - நான்
வாழ்ந்திருக்கும் நாள்
..........வரையில் அழியாதெப்
....................போதும் - அது - போதும்
என்றேனும் என்காதல் தெரியும் - அந்த
..........இனியவலியை உன்மனமும் அறியும் -விட்டுச்
சென்றுமனம் தவிக்கவிட
..........உன்னுள்ளும் காதல்தீ
....................எரியும் - என்தவிப்பு - புரியும்
வாடாமல் பூத்திருக்கும் முல்லை - நீ
..........வசந்தங்கள் பெற்றெடுத்தப் பிள்ளை - உன்னைத்
தேடாமல் வாழ்வதெனில்
..........தீராது என்மனதில்
....................தொல்லை - நீஎன் - எல்லை