முகமூடி மனிதர்கள்

பட்டாமூச்சி சிறகுடுத்திய
பருந்து களுண்டு
பொதுநல போர்கவைக்குள்
பெரியமனிதர் களாய்

கபட நாடகத்தால்
கன்னியரை சீரழிக்கும்
காமப்பேய்க ளுண்டு
காக்குமி னத்தை சேர்ந்த
கண்ணியவான்களாய்

அழகு
மீன்போன்ற
வேடமிட்ட முதலைகளுண்டு
வீழ்வதை காணத் துடிக்கும்
உறவுகளாய்

தத்தையென கொஞ்சிவரும்
அட்டைக ளுண்டு
பாசமென்ற அரிதாரம்பூசிய
உடன்பிறப்புகளாய்

தோள் கொடுக்கும்
உறவென்று யார் சொன்னது?
தோல் வலிக்காது உயிரறுக்கும்
நண்பர்களை...

இந்த
மனிதர்களின்
நிஜமுகம்காண - சொந்த
தொழிலொன்று
தொடங்குதலே போதுமோ?

என்
ஒற்றை இருதயமே
இன்னும் எத்தனை
காயம் தாங்குவாய் நீ?

இனியாவது உணர்ந்துவிடு

நீளும் கரமெல்லாம்
நீர்துடைப்பதல்ல
கண்களை குத்திவிட்டு
கண்ணீர் குடிக்கும் காட்டேறி களென்று

உதவியளிக்க ஓடிவரும்
உத்தமர்களெல்லாம்
உண்மைக்கு பின்னால்
ஒளிந்து வாழும் ஓநாய்க ளென்று

அய்யோ!
இன்னும் எத்தனை வயதில்தான்
இந்த
உலகம் விளங்கும்?

பிழைக்கத் தெரியா
முட்டாளென்று
புறம்பேசும் மூடர்களே
நீர் ஆட்டுமந்தை
நான் போர்குதிரை
சகதிகளென்ன
சந்தனத்தை விமர்சிப்பது?

உணர்வுக்கொள்ளிகளே!
உழைக்கத் தெரியா உலூகங்களே
உயர்திணை முகமூடியணிந்த அக்ரினைகளே
உம்போன்று
அண்டிபிழைக்கும் அற்பபிறவி
நானல்ல.....!

எழுதியவர் : யாழ்மொழி (31-Oct-14, 3:12 pm)
பார்வை : 1323

மேலே