உந்தன் நிறமென்ன உணரடி பெண்ணே - இராஜ்குமார்

உந்தன் நிறமென்ன உணரடி பெண்ணே
====================================

கணவன் உயிரும் பிரிந்திடவே - நான்
சிறகை இழந்த பறவையடி ..!
உறவும் என்னை சூழ்ந்திடவே - நான்
கண்ணீர் சிந்தும் குழந்தையடி ..!

ஆணின் பார்வை முறைத்திடவே - என்
தேகம் தினமும் வருந்துதடி ..!
அவல வார்த்தை துரத்திடவே - என்
இலக்கு இன்னும் தூரமடி ..!

வீடும் வெறுத்து விரட்டிடவே - என்
வாழ்க்கை இறக்க துடிக்குதடி ..!
பிறந்த பிள்ளை அழுதிடவே - என்
பிறவி புதிதாய் பிறக்குதடி ..!

கற்ற கல்வி உடன்வரவே - நான்
பெற்ற வேலை அணைக்குதடி ..!
கையில் பணமும் நிறைந்திடவே - என்
சொந்த வீடும் நிலைக்குதடி ..!

பக்குவம் வாழ்வில் படிந்திடவே - என்
பயணம் வானில் பறக்குதடி ..!
பிள்ளைகள் சிறப்பாய் படித்திடவே - என்
இலக்கு சிகரம் முட்டுதடி ..!

மனங்கள் மட்டும் மடிந்திடவே - புது
பிணங்கள் புதிதாய் பேசுமடி .!
பெண்மை வானம் உடைந்திடவே - அது
வன்மை துளியாய் வீழுமடி ..!

உணர்வை செதுக்கி வளர்த்தாலே - உன்
வானவில் விழியில் பதியுமடி ..!
வீரத்தை விதையாய் நினைத்தாலே - உன்
வேட்கை விண்ணில் உலவுமடி ..!

துணிவை விரலில் அணிந்திடவே - உன்
துன்பம் தோல்வியாய் மூழ்குமடி ..!
பணிவை மனதில் தைத்திடவே - உன்
வெற்றி நிலவாய் ஒளிருமடி ..!

விதவை விலகி அமர்ந்தாலே - உன்
உலகம் சருகாய் உதிருமடி ..!
வாழ்வை இரசித்து நடந்தாலே - உன்
உருவம் சிலையாய் சிரிக்குமடி ..!

- இராஜ்குமார்


நன்றி : தங்கை - ப்ரியா

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Nov-14, 10:45 am)
பார்வை : 600

மேலே