தமிழர் வாழ்வியல் கோப்பு --ஆசார கோவை
பழந்தமிழர் வாழ்வியல் ஒழுக்கம் தேடி பயணித்தபோது நெறி சொல்லும் நூற்கள் கடந்து ஆசார கோவை என்ற நூலினை காண நேரிட்டது .
இப்படி வாழ்வதுதான் தமிழ் மரபா என என்னும் வகையில் பல வாழ்வு ஒழுக்கங்களை காண நேரிட்டது. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுகிறேன் .
எது ஒழுக்கம் ..?
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. 1
நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும்
ஒழுக்கம் பேணுவதால் கிடைக்கும் நன்மை என்ன ?
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 2
நற்குடிப்பிறப்பு, நீண்ட வாழ்நாள், செல்வம், அழகுடைமை, நிலத்திற்கு உரிமை, சொல் மேன்மை, படிப்பு, பிணியில்லாமை இவை எட்டையும் ஒழுக்கம் தவறாதவர்கள் அடைவர்.
துயில் எழுதல் இறை வணக்கம்
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4
விடியற்காலையில் விழித்தெழுந்து, மறுநாள் செய்ய வேண்டிய அறச்செயல்களையும், வருவாய்க்கான செயல்களையும், சிந்தித்து, தாயையும் தந்தையையும் தொழுது ஒரு செயலைச் செய்ய அறிவுடையோர் சொல்லிய முறையாகும்.
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. 9
விடியற்காலையில் பல் சுத்தம் செய்து, கண் கழுவி கடவுளை வணங்கித் தொழ வேண்டும். பின் நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொடங்க வேண்டும். மாலையில் கடவுளை வணங்குதல் குற்றமாகும்.
கட்டாய குளியல்
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! 10
தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த போதும், உண்ணும் பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்திலும், கீழ் மக்கள் தீண்டிய போதும், மலசலங் கழித்த காலத்தும் நீராட வேண்டும்
செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. 12
தலையில் தேய்த்த எண்ணெயினால் யாதொரு உறுப்பையும் தீண்டக்கூடாது. பிறர் உடுத்திய ஆடையும், பிறர் தொட்ட செருப்பும் அணிந்து கொள்ள கூடாது.
செய்யத் தகாதவை
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. 13
நீரில் தம் நிழலை விரும்பி பார்க்கமாட்டார். நிலத்தை கீற மாட்டார். இரவில் மரத்தின் கீழ் நிற்கமாட்டார். நோய்பட்டபோதும் நீரைத் தொடாமல் எண்ணெயை உடம்பில் தேய்க்க மாட்டார். எண்ணெய் தேய்த்த பின் தம் உடம்பின் மேல் நீரை தெளித்துக் கொள்ளாது புலையை தம் கண்ணால் பார்க்க மாட்டார்.
நீராடும் முறை
(நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். 14
ஆராய்ந்த அறிவுடையார் நீராடும் பொழுது நீந்தமாட்டார், எச்சிலை உமிழ மாட்டார், அமுங்கியிருக்க மாட்டார், விளையாட மாட்டார், எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் கழுத்தளவு அமிழ்ந்து குளிக்க மாட்டார்.
ஆடை உடுத்தல்
உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை. 11
நீராடும் போது ஓர் ஆடையும், உண்ணும் போது இரண்டு ஆடையும் அணியாமல் இருக்கக் கூடாது. நீரில் ஆடையை பிழியமாட்டார். ஒரு ஆடை உடுத்தி அவையின்கண் செல்லக்கூடாது. இது பழையோர் கண்ட முறைமையாகும்.
உணவு உண்ணும்போது
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து. 18
நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!' என்பதே-
பேர் அறிவாளர் துணிவு. 19
கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு! 20
ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்.
தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! 39
பிறர்க்காக அன்றி தனக்காக உலை வையார், உணவு உட்கொள்ளார், எச்சிற்படுத்தார், மனையில் இருக்கும் தெய்வங்களுக்கு ஊட்டினதை அறிந்து பின் தாம் உண்பார்.
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 21
நல்லொழுக்கத்தினின்று தவறாத பெரியோர்கள், விருந்தினர்க்கும், மூத்தோர்களுக்கும், பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பிள்ளைகளுக்கும் உணவு அளிக்காமல் தான் உண்ணமாட்டார்.
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு. 22
கிழக்கு திசையும், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மற்ற திசைகளும் நல்லவைகளாகும். உச்சிப் பொழுதில் உண்ணுதல் நலம். ஆனால் வாயிற்படிக்கு நேராக கட்டிலிட்டு படுத்தல் ஆகாது.
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! 23
படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.
முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால். 24
தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.
கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண். 25
உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.
முதியவரைப் பக்கத்து வையார்; விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து,
அன்பின் திரியாமை, ஆசாரம் நீங்காமை,
பண்பினால் நீக்கல், கலம்! 26
தம்மைவிட மூத்தாருடன் உண்ணுதல் கூடாது. அப்படி உண்ணும்போது ஒழுங்குப்படி சிறிய கலங்களை கொண்டு ஒழுக்கம் தவறாமல் உண்டு அக்கலங்களை உடனே முறைப்படி நீக்க வேண்டும்.
இழியாமை நன்கு உமிழ்ந்து, எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா
முக் கால் குடித்துத் துடைத்து, முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி, வாய்பூசல் -
மிக்கவர் கண்ட நெறி. 27
வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.
இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இரு கை
சொறியார், உடம்பு மடுத்து. 28
இரண்டு கைகளாலும் தண்ணீர் குடியார். ஒரு கையால் பெரியோர்க்கு கொடுக்க மாட்டார், வாங்க மாட்டார். இரண்டு கைகளையும் வைத்து சொறிய மாட்டார்.
உறக்கம்
அந்திப் பொழுது, கிடவார், நடவாரே;
உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி
அல்கு உண்டு அடங்கல் வழி. 29
மாலைப் பொழுதில் படுத்துத் தூங்குவதும், உண்ணுதலும், நடத்தலும் கூடாது. மாலையில் உண்ணமாட்டார், கோபப்படமாட்டார். முற்பொழுது விளக்கு ஏற்றி இரவில் உண்டு உறங்குதல் நன்று.
கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,
வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்
உடல் கொடுத்து, சேர்தல் வழி. 30
படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும்.
கழித்தல்
புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார். 32
அறிவுடையார் புல்லின் மீதும், பயிர் நிலத்தும், பசுவின் சாணத்தின் மேலும், சுடுகாட்டிலும், வழியிலும், தண்ணீரிலும், ஆலயங்களிலும், நிழலுள்ள இடத்திலும், சாம்பலிலும் ஆகிய பத்து இடங்களில் எச்சில் உமிழ்தலையும், மலசலங்கழித்தலையும் செய்ய மாட்டார்.
பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிழ்வோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார். 34
பத்து திசையினையும் மறைத்துக் கொண்டு, அந்தரத்தில் செய்வதாக நினைத்துக் கொண்டு எச்சில் உமிழ்தலும், மலங்கழித்தலும் செய்ய வேண்டும். இந்திர பதவியே கிடைத்தாலும் வெளிப்படையாக செய்யக்கூடாது.
நண்பர்களே தமிழர்களின் வாழ்வியல் நெறியோடு இன்று நாம் கடைபிடிக்கும் முறையினை ஒப்பிட்டு பாருங்கள் .. இன்னும் பல விசயங்களை இந்த நூல் உரைக்கிறது .. அதனை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்கிறேன் ..