வெற்று வெட்டு
வெற்று வெட்டு .
வெட்டுதல்கள் நடைபெற்றுக்
கொண்டேதான் இருக்கின்றன .
அவ்வப்போது நானும் வெட்டுவதுண்டு
நகங்களை - அளவுக்கு மீறி வளர்ந்ததினால் .
தினமும் மனைவி வெட்டுகிறாள் விதவிதமான
காய்கறிகளை - உணவுக்காக .
நேஷனல் சலூன் நைனார்
வெட்டிக் கொண்டே இருக்கிறார்
தலை மயிர்களை - அழகு படுத்த .
வீதி வீதியாக கூவித் திரியும் வீரராகவன்
ஏதேனும் ஒரு வீட்டு மரமேறி
வெட்டித் தள்ளுகிறார்
தேங்காய் குலைகளை - பிழைப்புக்காக .
நூற்றுக் கணக்கில் வெட்டித் தள்ளப் படுகின்றன
ஆடுகளும் கோழிகளும்
அம்மன் கோயில் கொடையன்று
படைப்பவர் வீட்டில் அறுசுவை விருந்துக்காக .
ஒட்டகங்கள் கூட வெட்டப் படுகின்றன
குர்பானி நோக்கத்தோடு .
ஒவ்வொரு வெட்டுக்குப் பின்னும்
ஏதோ ஒரு காரணமும்
ஏதோ ஒரு தேவையும்
இருக்கத்தான் செய்கிறது .
ஆனால்
சில சமயங்களில்
மனிதர்கள் ஒருவரை ஒருவர்
வெட்டிக் கொள்வது / கொல்வது
ஏன் என்றுதான் புரியவே இல்லை
எத்தனை யோசித்தும் .
- சுப்ரா .