வளர்ந்திடும் நம்பாரதம் வல்லரசாய்

மலர்ந்த பூக்களின் மத்தியில் அரும்பு
மயக்கிடும் முகமாய் வியப்பின் விளிம்பு !
உற்றுப் பார்க்கிறது உலகினை சற்றே
உள்ளத்தில் பீறிடும் சிந்தனை கூறிடும் !
அகிலத்தை கண்டதும் அழகிய மழலைக்கு
அழுவதா சிரிப்பதாஎன ஆழ்ந்த யோசனை !
பாதிமுகம் சிரித்திட விரைவதும் தெரிகிறது
மீதிமுகமோ அழுதிட விழைவதும் புரிகிறது !
விழிகளில் தெரியுது வழிந்திடும் சிந்தை
வழியினைத் தேடுது வாழ வையகத்தில் !
குழம்பிய மனதால் குறுகுறுப் பார்வை
குறுகிய நெஞ்சம் குழந்தைப் பருவத்தால் !
அளவை சொன்னேன் நெஞ்சமதை அறிந்திடுவீர்
அறியும் வயதல்லவே அதற்கும் வளரும்வரை !
வருங்கால தலைமுறை தடமாறாது இருப்பின்
வளர்ந்திடும் நம்பாரதம் வல்லரசாய் நிச்சயம் !
பழனி குமார்