நாம் எங்கே போகிறோம்

உலகின் வெளிச்சக்கதிர்கள் எல்லாம்
இந்தியாவை நோக்கியே நீள்கிறது.
இருளை நோக்கித்தானே
ஒளிக்கதிர்கள் நீளும்?!

'ஏறுபோல் நட' என்று
பணித்தான் எம் தலைவன்.
நொண்டிச் சுதந்திரத்தில்
முடமானது எங்கள் வாழ்வு !

இந்தச் சுதந்திரம் நாங்கள்
சொந்தமாய் தயாரித்த
கோவணத்தைத் திருடிக்கொண்டு
இலவசத் திருவோட்டை
ஏந்த வைத்திருக்கிறது.

திருவோட்டிலும்
ஏதாவது தேருமா என்று
தேய்த்துப் பார்த்து
பொத்தல் போட்டுவிட்டன
அரசியல் புழுக்கள்.

எல்லாவற்றையும் துறப்பது
எங்கள் ஆன்மீகம் !
இறுதியாய்த் துறந்தது
மனிதத்தன்மை என்பதாய் ஞாபகம்.

தேசத்தை இருள் சூழ்ந்ததை
முதலில் கண்டுகொண்டது
நகரத்துப் பெண்கள்தாம் !
இரவு நேர உடைகளையே
எந்நேரமும் உடுத்துகிறார்கள்.

வீரத்தின் விளைநிலம்
எம் ஆண்மக்கள்!
தனிமையில் அனுமதியோம்
பெண்ணின் கற்பை!

அரசுத்துறை வாகனமெல்லாம்
சிகப்பு விளக்குகள்.
அரசியல் விபச்சாரத்தின்
அடையாளமாக !

வீதிகள் தோறும்
ஆண்மைக்குறைவு விளம்பரம்!
நாடு முழுவதும் இருக்கும்
தலைவர்களின் தேவைக்காக!

நடிகை வீட்டில் வளர்ந்தால்
இங்கு ஆண் நாய்க்குக்
கூட பிரசவம் நடக்கும்!
அப்படி இருக்கிறது
நாட்டில் எழுத்துச் சுதந்திரம்!

ஆசிரமங்கள் தருகின்றன
பிள்ளை வரம்.
காரணம்..
அங்கு அநேகம்
நடப்பது கலவித்தவம்1

'மறப்போம் மன்னிப்போம்'
எம் வாழ்வியல் தத்துவம்.
500 ரூபாய் நோட்டுக்கு
5 ஆண்டு குற்றங்களை !

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'
என்பது மட்டும் உணரப்படுகிறது.
தேசியத் தினங்களில்
மிட்டாய்களை வேண்டி !

மாளிகைகளை வாழவைக்க
மசோதாக்கள் நிறைவேற்றம்.
கழிப்பறைகளின் கவலைக்கிடத்தால்
நாடே நரகலாகிக் கிடக்கிறது !

கழிவுச் சிந்தனைகளே
இங்கு கனவுப்பாதை!

அழிந்துவரும் பொருளே
இங்கு அடையாளச் சின்னம்!

என்னபேசி என்ன பயன்?

மனசாட்சியை விற்று
மகுடம் பெற்றவரிடம்
குணமாட்சி வேண்டி கோல் உயர்த்துவது
கரிய சரித்திரத்தின்
வறிய நகைச்சுவை !

தூய்மையான இந்தியாவுக்காக
துடைப்பம் ஏந்தி இருக்கிறது தேசம் !
நல்லது.. மிக நல்லது !

முதலில் முன்னவர்
திருடிக்கொண்டுபோன
பாரத மாதாவின்
சேலையைக் கண்டுபிடியுங்கள்.

அந்தரங்கம் மறைக்க முடியாமல்
அவள் அழுதுகொண்டிருகிறாள் !

வல்லரசு கனவு காணும்
எம் இந்தியாவே!
நாம் சிகரத்தை
சீக்கிரம் தொட்டுவிடலாம்!
இந்த பள்ளத்தாக்குகளில்
இருந்து எழுந்து மேலே வந்தால்!

வருவோமா????இப்படிக்கு,
விவேக்.செ.
(கட்டிடப்பொறியியல் மாணவன்- இறுதியாண்டு,
முனைவர்.மகாலிங்கம் பொறியியல் கல்லூரி,பொள்ளாச்சி.

எழுதியவர் : விவேக்.செ (15-Nov-14, 9:04 pm)
பார்வை : 149

மேலே