தேன்மொழி - 02 - இராஜ்குமார்

தேன்மொழி - 02 - இராஜ்குமார்
==============================

பொழுது விடிந்தது ...

ஒற்றை நிலவு மிக அழகாய் ஒளிர்ந்தது ..மழையின் ஈரம் சற்றும் குறையாமல் பூமியின் மேனி பூவின் மேனி ஆனது ....தேசத்தின் அதிகாலை பறவைகளின் ராகத்தில் ரம்மியம் தெளித்தது ..

வீட்டின் வாசலில் இரண்டு பெண் குழந்தையுடன் நின்ற பெண் முத்துவையும் கலையையும் முறைத்து பார்த்தாள் ....பார்த்தவள் முத்துவின் முதல் மனைவி " வடிவு " ....அவளின் பார்வை ஆயிரம் வார்த்தை வீசியது ....அவளின் பேச்சு அதைவிட அதிகமான வார்த்தையை பேசியது..

தனது கோபத்தை வார்த்தை வழி சிதற செய்தாள்....குளிரான காலை பொழுதிலும் ... வடிவின் வார்த்தைகள் நெருப்பின் துகளாய் கலையின் நெஞ்சை எரித்தன ....தலை குனிந்தே நின்றாள் கயல்..தேகம் முழுக்க வருந்தினாள். ..மனதின் வார்த்தை வெளிவர முடியாமல் கண்ணீரில் மூழ்கி போனது கலைக்கு..

திட்டி முடித்த வடிவு ...வேகமாய் சென்று ..அதிவேகமாய் வீட்டின் கதவை சாத்தினாள்...வடிவின் இரு பெண் குழந்தைகளான " உமா " மற்றும் " சித்ரா " வடிவுடன் வீட்டினுள் நின்றனர் ....வீட்டினுள்ளே முத்துவின் அம்மா அமைதியாய் உறங்கி கொண்டிருந்தார் ..

வீட்டிற்கு வெளியே நின்ற முத்து ....கலையிடம்..

" இப்ப எதுக்குல அழுற "

"..... ம்ம்ம் ..ஒண்ணுமில்ல "

கலையின் கையில் இருந்த குழந்தை புரியா மொழியில் ஏதோ சொல்லியது ..அதில் இருவருக்கும் ஏதோ புரிந்தது .கலையின் மனம் நனைந்தது ..முத்துவின் மனம் தெளிந்தது ..

மெல்ல சென்றவர் ...மெதுவாக வீட்டின் கதவை தட்ட ..,,திறக்காமல் போக ..மழலையின் மொழி மீண்டும் முத்துவின் மனதில்.....இம்முறை கதவை திறக்கும்படி உடைத்தார் உடைந்த மனதோடு .. கலையை அழைத்து கொண்டு வீட்டினுள் சென்றார் ..முத்துவின் அம்மா மெல்ல சிரித்தார் ...உமாவும் சித்ராவும் சிறு குழந்தையின் முகத்தை பார்க்க நினைத்ததை ..அவர்களின் கண்கள் காட்டியது ..ஆனால் அவர்களின் எண்ணத்தை முழுதாய் வடிகட்டியது வடிவின் செய்கை .

குழந்தையோடு அமர்ந்தாள் கலை ...குழந்தை சிரித்தது ..கலையின் இதயம் பிளந்தது ...காரணம் அவளே தான் ..குற்ற உணர்வு அவளை தின்றது குழந்தை சிரிப்பின் வழியில் ..

கலை தனது திருமணத்திற்கு பின் ....முத்துவுடன் ஒரே வீட்டில் இருந்ததால் ...அதாவது முத்து , முத்துவின் முதல் மனைவி வடிவு , மகள்கள் உமா , சித்ரா , மேலும் முத்துவின் அம்மா ..அனைவரும் ஒரே வீட்டில் ..வீட்டில் வறுமை மட்டுமே வாழ்ந்தது ..பிரச்சனை நிரந்தரமாய் தங்கியது ..வெறுப்பு
அனைவரின் விழிகளிலும் ..

இப்படி ஒரு நிலை மட்டுமே கலையை சூழ ..பாதம் முழுக்க வெப்பமே வாழ ...வெந்து கொண்டே தேகம் இளைத்தால் ...இறுதியில் தனக்கு குழந்தையே வேண்டாம் என முடிவெடுத்தாள் .. முடிவோடு நிற்கவில்லை .. தனது கருவை கலைக்க பலவாறு முனைந்தாள் ..கள்ளி பால் ..அரளி விதை என தனக்கு தெரிந்த கரு கலைப்பை அடிக்கடி செய்தாள் ...கரு கலைவதாய் இல்லை ...அது கலையவும் இல்லை ...கரு கலையாமல் போக கலை கலங்கி போனாள் ...எப்படியோ எல்லாம் நடந்து முடிந்து குழந்தை பிறந்தது ...பின் குழந்தையோடு வீட்டின் முன் நின்றனர் ... இப்போது அக்குழந்தை சிரித்து சிரித்து தன் அன்னையை அசையாமல் பார்க்க செய்தது ... கரு மழலையாகி கண் முன் சிரிப்பதை கலையால் உள்வாங்க முடியவில்லை ..


குழந்தை இல்லாதபோதே பிரச்சனை அதிகம் ..தற்போது இன்னும் தாண்டவம் ஆடியது ..மனைவியாக கலை அடைந்த இன்னலை விட ..ஒரு அன்னையாக அதிக கவலை கொண்டாள்...அவள் விலகினாலும் கவலை அவளை விடுவதாய் இல்லை ..துரத்தியது ...துரத்தி கொண்டே தொடர்ந்தது ..கண்ணீர் எல்லாம் அவளுக்கு கரிக்கவில்லை ...சுவை அது சுத்தமாய் மறைந்தது அவளின் நாவிலும் வாழ்வின் நகர்விலும் ..நகராமல் நின்றது அவளும் அவளின் நிமிடமும் ..குழந்தை மட்டும் சிரித்தது ..குழந்தைக்காக வாழ சொன்னது சிரித்த மழலை இதழ்கள் ..


மாலை நேரம்.. ..குழந்தை உறங்கியது ....வடிவு வழக்கம் போல் பிரச்சனை செய்தாள் ..அது ஒரு தேங்காய் எண்ணெய்க்கான பிரச்சனை எனலாம் ..எண்ணெய் துளி போலவே பிரச்சனை அடர்த்தியானது ..இன்னும் வேகமானது ..வேகத்தின் விளிப்பில் உறங்கிய குழந்தை தூக்கி வீசப்பட்டது முத்துவின் அன்னையால் ...அதிர்ந்து போனாள் கலை ..அள்ளி எடுத்தால் அலறிய குழந்தையை ...மடியோடு வைத்தாள் ...உணர்வினில் கலை மடிந்தே போனாள் .. வாசலில் நின்றாள் கலை ,,

வடிவு கோபத்தின் உருவமாய் மாறினாள் ..தன்னை மறந்தாள்..மனிதம் சிதைத்தாள்...அவளின் இரு குழந்தையும் அமைதி கற்றன ...முத்துவின் அன்னை கலையின் விழிகளை விரலோடு பிடுங்க நினைத்தார் .. ஆனால் கலையோ தரை பார்த்தே நின்றாள்...கலை கட்டிய சேலை குழந்தையின் முகத்திற்கு முதலுதவி செய்தது ...

மீண்டும் வீட்டின் கதவு சாத்தப்பட்டது ...ஒரு பெட்டி வெளியே ஏறியப்பட்டது ..அது கயலின் கால் நகத்தை சற்று கீறியது ..இரண்டு மணி நேரம் கடந்தது ...இரண்டு மணி நேரமும் குழந்தை அவளின் சேலை நூலை எண்ணியது ..கலை குழந்தையின் நெற்றி தொட்டே நின்றாள் ...முத்து வந்தார் மூன்று மணி நேரம் கழித்து ..நிலைமை அறிந்து நொந்து போனார் ..

கலையை அழைத்து கொண்டு தனது தோட்டத்திற்கு சென்றார் ....அங்கு பட்டுப் பூச்சிகளை வளர்க்கும் சிறு குடிசை ஒன்றில் இனி வாழ்வோம் என முடிவெடுத்தார் ...கலையும் " சரி "என்றாள் .சில வருடம் சென்றது .முத்து தோட்டக்காரர் ...இருப்பினும் வறுமை அதிகம் ...இங்கே இருந்து உழைப்பதை விட வெளியில் சென்றால் நிறைய பொற்காசுகள் சேர்க்கலாம் என நினைத்தார் ....கலையும் முத்துவும் வெளியில் செல்ல முடிவு செய்தனர் ..வேலை தேடி சென்றனர் ..

ஒரு கரும்பு ஆலையில் வேலை செய்தனர் ..குழந்தை சற்று வளர்ந்தது ..கொஞ்சம் நடந்தது ...பேசவும் செய்தது ...கரும்பு ஆலை ..ஒரு விவசாய உற்பத்தி நிலையம் ..பலரின் உழைப்பு ...வறண்ட நிலத்தை மழைத்துளி நனைக்க ...விவசாயின் நெஞ்சம் குளிர்ந்து ..நிலத்தை உழுது ....உழுத நிலத்தின் தேகத்தை மண் வெட்டியால் சீர் செய்யணும் ..சீர் செய்யும் நொடிகளில் வேகம் விண்ணை பிளக்கும் ...தலைக்கு கட்டிய துணி வியர்வையால் குளிக்கும் ...உடல் வியர்வை மட்டுமே சுரக்கும் ..அசதி போக்கும் அரட்டை.

துண்டு துண்டாய் வெட்டிய கரும்பை.. பாத்தி பாத்தியாய் பிரித்த நிலத்தில் வரிசை வரிசையாய் நட்டு நிம்மதி பெற்ற பின்னர் ..காலம் நகரும் ...கரையான் நிலத்தில் வாழும் ...எலிகள் திருவிழா காணும் ..கரும்பு துணாய் வளரும் ..வளர்ந்த கரும்பை மீண்டும் இரும்பு கத்தியால் வெட்டி வீழ்த்தி ...சுமை சுமையாய் கட்டி ...கரும்பு ஆலைக்கு முன் அடுக்கணும் ..அப்புறம் கரும்பை பிழியும் சக்கரம் தன் திறனை காட்ட ...கரும்பு எல்லாம் கரும்பு சாராய் ஒரு கொப்பரையில் குவியும் ...இப்படி குவிந்த கரும்பு சாற்றை கொதிக்க வைத்து சக்கரையாக்கும் வேலையில் இருந்தார் முத்து ...

காலை நேரம் ...ஆலை கொப்பரைக்கு தீ மூட்டி கொண்டு இருந்த முத்து ...குழந்தையிடம் குடிக்க நீர் கேட்டார் ..குழந்தையும் மெல்ல சென்று எடுத்து வந்தது ...தண்ணியை குழந்தையின் கை விரல் முத்துவிடம் கொடுத்தது ....முத்துவின் தாகத்தை தண்ணீர் தணிக்கும் முன்...

குழந்தையின் இடது கால் மெதுவாய் இறங்கியது ஆலைக்கு தீ மூட்டும் கொப்பரை அடுப்பில் ...பாதம் அனலில் சிக்க முட்டியை மோதியது கொப்பரை ...

துடித்து போனார் முத்து ...கருகி போனாள் கலை ...குழந்தை நெருப்பின் தேகத்தை தொட்டதால் வெப்பம் உணர்ந்தது ..இடது காலின் பாதத்திற்கு மேல் வட்ட வடிவில் வெந்து போனது குழந்தையின் தோல் . .குணமாகும் வரை குழந்தையை வீட்டிற்கு அழைத்து போக சொன்னார் முத்து ...

கலை குழந்தையுடன் மீண்டும் தோட்டத்தில் உள்ள சிறு குடிசைக்கு வந்தாள்..சில மாதம் சென்றது
குழந்தை நன்றாக நடந்தது ...மீண்டும் சிரித்தது ...கலையும் சிரித்தாள் ...தோட்டத்தின் பூக்களும் மெல்ல சிரித்தது ..

மதிய வேளை...தனது துணிகளை கிணற்று மேட்டில் துவைத்து கொண்டு இருந்தாள் கலை ..கிணற்றை சுற்றி சில மரம் ..மரத்தின் கிளையில் சில பறவை ...பறவையின் குரலில் எதையோ ரசிக்கிறாள் ..கிணற்றில் சிறுவர்கள் நீந்தினர் ..திடலின் மேலிருந்து கிணற்றுக்குள் குதித்து விளையாடினர் ...

சிறுவர்களை ரசித்த குழந்தை அழகாய் சிரித்தது ....கை தட்டியது ...

கை தட்டிய ஓசையோடு குழந்தை வேகமாய் விழுந்தது ...

கி............
.........ண........
.......................ற்......
...................................று......
..................................................க்.......
...................................................................கு ......
....................................................................................ள்.....



- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Nov-14, 11:25 am)
பார்வை : 309

மேலே