தேவ தூதரின் சிறகுகள்-----அஹமது அலி

பரிசுத்த ஆவியின் பார்வை பட்டு
பாருலகம் ஜொலித்தது
தேவனின் செய்தி சுமந்து
ஏவல் புரிய பறந்தது.!
பொன்னுலகம் இறங்கி
மண்ணுலகம் நெருங்கி
மின்னல் வேகம் மிஞ்சி
தேவதூதர் சிறகு விரித்தார்..!
பூமியின் விளிம்புகள் தொட்டு
பூலோகமே சிறகின் நிழல் பட்டு
இத்தரையோர் யாவரும்
நித்திரையில் ஆழ்ந்த போது...
பேரண்டம் கிழித்து
பெரியோன் புகழ் விளித்து
இருமருங்கும் சிறகசைத்து
பெருங்காற்றை வாரியிரைத்து...
எண்ணிலடங்கா சிறகுடனே
எண்ண முடியா வேகத்துடனே
அனுமானச் சிறகு அறுநூறும்
அமானுஷ்யமாக திகிலூட்டும்..!
பூமிக்கும் வானுக்குமாய் நீண்டு
வெண்ணுடை தன்னுடையாய் பூண்டு
நன்மறையேந்தி வந்திறங்கினார்
நானிலம் சிறக்க நன்மாராயம் கூறினார்.!
குறிப்பு:
காட்சிப் படம் கற்பனையே!