காத்திருக்க முடியா காத்திருப்பு

[ முன் குறிப்பு : இது படைப்புக்கான படம் அல்ல.. படத்திற்கான படைப்பே ]

உன் பார்வை ஒளிப்பட்டு
என் விழிகளில் விடியல் தொடங்கி
என்னையே பிரகாசித்த
அந்த ஒரு
எழுச்சி கொண்ட ஏகாந்த இரவு...

இருப்பின் அச்சத்தை
நீ அருகில் இருந்ததாலேயே
அறியப் படாமல்
என்னையே தொலைக்கத் துணிந்த
அந்த ஒரு
அச்சமற்ற ஆனந்த இரவு...

நீ தொட்ட
தொட நினைத்த
நீ பார்த்த
பார்க்க நினைத்த
பாகங்களின் ஸ்பரிசங்கள் எல்லாம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்த
அந்த ஒரு
பௌர்ணமியின் பின்னிரவு...

விரல் தொட்ட நொடியில்
உயிர் தொட்ட உணர்வில்
வெட்கத்தின் சிறு வலியில்
கன்னத்தோடு சேர்ந்து இந்த
கன்னியே சிவந்த நாணத்தில்
கணப்பொழுதில் நினைவிழுந்து
கணப்பொழுதில் மீண்டெழுந்த
அந்த ஒரு
சுகம் தந்த சொப்பன இரவு...

ஆண்மையின் ஆதிக்கத்தில்
பெண்மையின் பிரியங்களெல்லாம்
பிடிவாதமற்ற பயங்களாக
பயமற்ற பிடிவாதங்களாக
(பரி)மாறிக் கொண்டே நீண்டிருந்த
அந்த ஒரு
நள்ளிரவு நல்இரவு...

ஒரு மழைமாதத்தின் இறுதியில்
மழையின் பார்வையில் நான் நனைய - உன்
பார்வை மழையில் நானே நனைய
மழைத்துளியும் மணித்துளியும் சேர்ந்தே கரைய
ஈருடலும் ஓருடலாய் சேர்ந்தே உறைய
உன் சுவாச சூட்டில்
என் தேகம் உலர்த்திக் கொண்ட
அந்த ஒரு
மறக்க இயலாத மழை இரவு...

நமது சந்திப்புகள்
அரங்கேறிய இந்த கல்மாடத்தில்
முதன் முதலாக நீ
காதலைத் தெரிவித்த அந்த கனநேரத்தில்
பேச்சற்று நின்ற கற்தூணும்
பேச்சே அற்று நின்ற கல்லாய் நானும்
மீண்டும் நிற்கிறோம்
உன் வரவை எதிர்பார்க்கும்
இந்த ஒரு
காத்திருக்க முடியா காத்திருப்பின் இரவு...

===================== ஜின்னா =================

பின் குறிப்பு:

தோழர் சரவணா இதே படத்திற்கு ஏற்கனவே கவிதை எழுதிஉள்ளார் (கவிதை எண்: 221406).
அவரால் / அந்த படத்தால் கவரப்பட்டு நானும் இப்படத்திற்கு எழுதிய படைப்பு இது...

கல்லூரி நாட்களின் கவிதைப் போட்டிகளுக்குப் பிறகு படம் பார்த்து கவிதை எழுதியது இதுதான்...
நன்றி நண்பர் சரவணா அவர்களே...

தளத் தோழர் / தோழமைகள் யார் வேண்டுமானாலும் எழுதலாம் இப்படம் உங்களையும் பாதித்தால்

படஉதவி...:க்கு நன்றி முகநூல் நட்பு நிறம் வில்வம்

எழுதியவர் : ஜின்னா (25-Nov-14, 1:03 am)
பார்வை : 745

மேலே