பெண்
அந்த கடைநிலை கடையில்
அந்த தெருவோர மூலையில்
அந்த பேரூந்து பயணத்தில்
அந்த இருள் நேர நடை மேடையில்
என்று நான் பயம் இல்லாது இருக்கிறேனோ
அன்று சொல்கிறேன்
தேசத்தின் மூலை முடுக்குகளில்
இடர்பாடுகள் இன்றி
சுடும் பாதைகள் இன்றி
கடும் வேதனை இன்றி
சுகமாய் ஒரு சுவாசம் கொள்ளும்
கடைசி மலர் உருவாகட்டும்
அன்று சொல்கிறேன்
வளைந்து நெளிந்து
சில மேடு பள்ளங்களையும்
சாதாரண சிதை
சதைகளையும்
இரத்த நாளங்களையும்
சிகப்பு இரத்தத்தையும் கொண்டு
மற்றவை போலவே மடிந்து
மங்கி மண்ணிற்கு உரமாகும்
சக உயிரினம் எனும் எண்ணங்கள்
உருவாகட்டும் அன்று
சொல்கிறேன்
காமம் தீர்க்கும்
போதை பொருளாய்
உருவகிக்கப்பட்ட என் மார்பகங்கள்
வெறும் பாலுட்டிகளின் சதைப்பற்று
என எண்ணம் கொள்ளுங்கள்
அன்று சொல்கிறேன்
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும்
மட்டும் என சொல்வதை
நிறுத்துங்கள் அன்று சொல்கிறேன்
திருமண மேடைகளில்
விற்பனை பொருளாய்
அமர்த்துவதை நிறுத்துங்கள்
அன்று சொல்கிறேன்
இதோ இந்த புலம்பலை
கூட காரணம் காட்டி
இதுவே உனக்களித்த
சுதந்திரம் தானே என சொல்வதை
நிறுத்துங்கள் அன்று சொல்கிறேன்
இது எனக்கும் சுதந்திர
நாடுதான் என.............
- பெண்