சாதித் தீ

இந்தச் சமுதாயம்
சாதித்தது என்ன!
சாதித் தீதானே!
சந்ததியை
சாம்பலாக்கும்
சாதித் தீதானே!

இங்கு
சாதி நெருப்பை
மனதில்
கட்டிக்கொள்ளாத
மனிதன் யார்!

இந்த சாதி நெருப்பு
அவனவன் அறிவிக்கு
அணிமணி ஆகிவிட்டது

இந்த நெருப்பை
அணிந்துகொள்வதில்
அவனவன்
நெகிழ்ந்து போகிறான்

ஒவ்வருவனுக்கும்
ஒரு வெப்பம் இருக்கிறது
அது சாதிச்சூடா என்றுகூட
சந்தேகமாய் இருக்கிறது!

வீதிக்கொரு சாதி
சாதிக்கொரு சுடுகாடு
அடடா...
எரிவதில்கூட நமக்கு
ஏற்றத் தாழ்வுகள்!

ஊர்களில் நாம்
சுடுகாட்டைப் பிரித்தோமே
நம் சுவாசக் காற்றைப்
பிரித்தோமா!

அன்று சாதியை
தள்ளி வைத்தோம்
இன்று
கொள்ளி வைத்தோம்
அதுதானே வேறுபாடு!

சாதித் தீயால்
நம் சமுதாயத்தை
சலவை செய்ய
முடியுமா!

இங்கு
தீப் பிடிக்காத
வீடுகள் உண்டு
சாதித்தீ பிடிக்காத
வீடுகள் உண்டா!

இந்தத் தீயை
தீய்பதற்கு
புயல் இன்னும்
புறப்படவில்லை!

ஓசோன் படலத்தில்
ஓட்டைபோல
நம் சமுதாயத்திலும்
சாக்கடையாய் சாதி!

கலப்புத் திருமணம்கூட
இன்னும் சிலருக்கு
கண்ணை மூடிக்கொண்டு
குடிக்கும்
கஷாயமாகவே கசக்கிறது!

சாதி என்ற
அந்த கோரமான
கோரைப்பல்லைப்
பிடுங்கினால்
இந்தியாவிற்கு அழகான
முகம் முளைக்கும்!

எழுதியவர் : ஜெயபாலன் (3-Dec-14, 11:52 am)
சேர்த்தது : ஜெயபாலன்
Tanglish : saathith thee
பார்வை : 3473

மேலே