முணுகுரலின் முடிவினிலே ஓர் அழுகுரலின் தொடக்கம்

முணுகுரலின் முடிவினிலே ஓர்
அழுகுரலின் தொடக்கம்
அன்றலர்ந்த மலர் அதனை
கைகளில் ஏந்தும் முன்னே நடுக்கம்
பால் பற்றி தெரிந்து கொள்ள பரபரப்பு
பிறப்புறுப்பை பார்பதற்கே பரிதவிப்பு
ஆணாய் அவனிருந்தால் ஆர்பரிப்பு
பெண்ணாகப் போய்விட்டால் சலசலப்பு
அடுத்தும் பொட்டையான்னு அப்பத்தா முணுமுணுப்பு
அதற்கென்ன இருக்கட்டும் துணையாய்
ஒன்றுகொன்று உறவினர்கள் கண்துடைப்பு
உன் வீட்டு குலசாமி தலைக்கட்டு
உன்னோடு முடிஞ்சதப்பா
பங்காளிகள் படபடப்பு
இறுதி வரை உழைக்க வேண்டும்
அவள் தந்த பெருந்திகைப்பு
வசவு பேச்சு காதில் பட அம்மாயி கொந்தளிப்பு
தனக்கொரு இணை தளிர் விட்டதென
தங்கை முன் தமக்கை வீற்றிருக்க
புதிதாய் அவிழ்ந்த உயிர் மேல்
பெற்றவள் கண்பதிப்பு
வெற்றுரை விளம்பிடும் வீணர்களே
விளங்கட்டும் உங்களுக்கு
வெற்றுடலாய் வீழ்ந்து கிடக்கும் இவள் - இனி படைக்கும்
வெற்றிகளை எண்ணிடவே வேண்டும் புதுக்கருவி!

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (6-Dec-14, 4:53 pm)
பார்வை : 119

மேலே