காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 06
முன் குறிப்பு: நண்பர்கள் ஜின்னா, குமரேசன் கிருஷ்ணன் பின் தொடர்ந்து என் சிறிய முயற்சி .......
=====================================================
காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 06 (முரளி)
சிறகில் பிரிந்த இறகு தன்
உறவைப் பிரிந்து மருக தாய்ப்
பறவை பறந்து செல்ல தான்
தனித்து வானில் தவழ
ஒன்றா யிருந்து சிறகு பலமாய்
நன்றாய் பறந்த நிலை போய்
ஒற்றை இதழாய் வானில்
சுற்றி மிதக் கையில்
உதிரத்தால் உணர்ந்த தாய்
உதிர்ந்ததால் பிரித்த தால்
செவிலித் தாய் காற்றதன்
கைப் பிடித்துக் கொள்ள
சோகம் மறக்க இறகு
மேகம் கடந்த பிறகு - கீழ்
நோக்க சடுதியில் கரும்
போர்வை புகையில் மறைய
கரி துடைத்து பார்க்கையில்
கரி யமில வாயு விழுங்கி
உயிர் மூச்சு வெளித் தரும்
அருமரம் தன்னில் இறங்க
பசுமை படர்ந் திருக்க
பறவைகள் சூழ்ந் திருக்க
பழங்கள் பூக்க ளிடையே
பறவைகள் மகிழ்ந் திருக்க
கூட்டுக்குள் வளரும் பூஞ்
சிட்டுக்கள் பல குரல்
மெட்டுக்கள் சில கணம் தன்
வீட்டை கண்முன் நிறுத்த
மனமே கலங்கிய மறு
கணமே இடியென ஓசை
நெஞ்சைப் பிளக்க கொடியோன்
கோடாலிக் கிரை மரமே
தரையில் வீழ்ந்த இறகு
சருகுடன் சற்றே புரண்டு
அருகில் வந்த பாலகன்
ஆசையால் கைக் கொள
இறைவன் கை இதுவென
இறுமாந்த இறகை புத்தக
இடுக்கில் பதுக்கிச் சிறுவன்
துடுக்காய்ப் பள்ளி செல்ல
இருண்ட உலகில் சிறிதே
மருண்ட இறகு தன் செவியால்
விரும்பா கல்வி மாணவர்க்கு
திணிப்பதை கேட்டு அழ
இலகுவாய் வாழ வழி யறியா
உலகுச் சிறை மீட்க - இறகும்
இளைஞர் குலத்தையும் இனி
கவிஞர் அடுத்து வாருங்கள்
---- முரளி