பயணங்கள் பெரும்பாலும்

வெளிச்சத்தின் விளிம்புகளில் என்னை தேடிக் கொண்டிருந்த ஒரு நாள்... மனம் வெறுத்து, ஒதுக்கி தள்ளிவிடுகிற செயற்கை இரவுகளை சிதறிவிட எத்தனித்த ஒரு தருணத்தில்...

சாலை போடுவதாய் சொல்லிவிட்டு வடவாரில் இருந்து மேற்கு நோக்கி காணாமல் போயிருந்த எங்கள் ஊர் புளிய மரங்களை எல்லாம் தேடி கண்டடைந்து அதன் பின்புறம் அமைதியாய் படுத்துக்கிடந்த பிள்ளையார் குளத்தை அடுத்த தென்னந்தோப்பின் வழியே நிலவொளியில் நான் நடக்க ஆரம்பித்த போது.,

”தம்பி எழுந்திருப்பா..பொழுது விடிஞ்சுருச்சு. ராயபுரம் ஸ்டாப் வந்துடுச்சு”. கண்டக்டர் அண்ணன் என் தோலை தட்டி எழுப்பி விட்டபோது...அப்போது தான் என் நினைவுக்கு வருகிறது. என் கிராமத்தின் நினைவுகளில் நான் ஒரு பயணத்தின் பகுதியில் நீந்தி கிடக்கிறேன் என்று.

ஒரு வழியாய் இறங்கி எனது அறைக்கு நடக்க ஆரம்பித்தேன்...புத்தக பையின் பாரத்தை தாங்கமாட்டாத கைகள் துவள ஆரம்பித்து விடும் போல இருந்தது. இருப்பினும் ஒரே மூச்சில் அதை தூக்கி கொண்டு ரூம் வரை நடந்து விடுவது என தீர்மானித்துவிட்டேன். என் கால்கள் முன்னேற முன்னேற கடை மனம் ஏனோ வீராணநல்லூரையே சிலாகிக்க ஆரம்பித்தது.

தம்பி.. மோட்டார் சந்துல தெக்கால பக்கமா மம்முட்டியும் , அருவாளும் இருக்கு அத எடுத்துகிட்டு.., அப்படியே அங்க மேயிற மாடுகள மில்லு கொட்டா பக்கம் ஓட்டி அடிச்சிட்டு வா...என்று அப்பா சொன்னது இன்னும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

நுங்கு பறிக்க வந்த சிறுவர்களின் உதவியோடு நுங்கு பறித்து நானும் நண்பர்களும் சாப்பிட..அப்பா சொன்னதை மறந்துவிட்ட எனக்கு அம்மா கையில ஒரு குச்சி எடுத்துகிட்டு வரப்போரமா மேன்ஜ மாடுங்கள வெரட்டும்போது தான் தெரிஞ்சது. செருப்பில்லாத அந்த காலுல என்னென்னமுல்லு குத்தியிருக்கும்னு.

இதோ இந்த சொகுசு வாழ்க்கைய நான் வாழ ஆரம்பிச்ச பிறகு பல நாலு யோசிசிருக்கன்... என்னுடைய கிராமத்து வாழ்க்கைய பத்தி. அப்பலாம், தோணாத பல கேள்விக்கு இப்போ என்கிட்ட கூட பதில் கிடைக்கல எனக்கு.

நான் எப்போ ஊருக்கு போனாலும் அப்பா கேக்கிற ஒரே வார்த்த தம்பி ஒடம்பு எப்டி இருக்கு? ஒன்னும் பிரச்ன இல்லையில்ல?நாங்க ஒன்னும் ஒன்ன வற்புறுத்தல. ஒன்னால முடியலனா தங்குன்னுதான் சொல்றேன்..என்றார்.

என் பயணங்கள் பெரும்பாலும் இரவுகளிலேயே இருப்பதால்..நான் ஊருக்கு செல்வது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இருப்பினும் நான் இரவில் தான் வருவேன் என்பதால் அம்மா எனக்காக வீட்டு திண்ணையில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து கொள்வார். அதன் அருகே ஒரு சிறிய பாட்டிலில் குடிக்க தண்ணீர்......

என் அறை வந்துவிட்டிருந்தது. புத்தக பையை இறக்கி வைத்துவிட்டு சுவர் ஓரமாய் உட்க்கார்ந்தேன். உடல் அசதியாய் இருந்தது ..அதனால், சில நிமிடமொருக்களித்து படுத்தேன்.

களத்து மேட்டில் கதிர் அடித்து முடித்துவிட்டு அப்பாவும் அம்மாவும் அண்ணன்களும் வரும் வரை நானும் அக்காவும் மட்டும் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்படும். நாங்கள் இருவருமே சிறு பிள்ளைகள்.

அந்த சமயத்திலெல்லாம் இரவு நெருங்கி விட்டாலே பயம் அதிகமாகிவிடும் எனக்கு. அதனால், அப்பாவும் மற்றவர்களும் வரும் வரை அறிக்கால் ஓரமாய் விளக்கை கொளுத்திவைத்துவிட்டு வாசலிலேயே உட்க்கார்ந்திருப்போம் நானும் அக்காவும்.

அந்த இரவு பொழுதில்...அவர்கள் வந்து ஆற்றிலோ ஆலங்குலத்திலோ குளித்துவிட்டு எங்களை வந்து பார்க்கும் போது சில நேரங்களில் இரவு 10 மணிகூட ஆகிவிடும்.

பக்கத்து வீட்டில் கூட விளக்கை அனைத்து இருப்பார்கள். இப்படியெல்லாம் இரவு பகல் பாராது எங்களின் எதிர்காலத்துக்கான நலனை மட்டுமே பெரிதாய் எண்ணியவர்கள் என் பெற்றோர்.

இந்த நிமிடத்தில் கூட நாங்கள் எப்படி இருக்கிறோம் என்கிற ஒற்றை கேள்வியையே அவர்களின் மனம் முனுமுனுத்தபடி இருக்கும். அவர்களின் நினைவுகளையெல்லாம் எங்களால் அழாமல் நினைக்க முடிவதேயில்லை நண்பர்களே.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (8-Dec-14, 8:47 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 49

மேலே