செய்ந்நன்றி யறிதல் 8 - நேரிசை வெண்பா
செய்தாரே துன்பம் அறியாது; நன்மையொன்று
செய்தார்வே றோர்நாளில் கன்னியப்பா - மெய்யாக
நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று. * 11:8
ஒரு உறவினர் தான் செய்வது தவறு என்றறியாமல் ஒரு கெடுதல் செய்து விட்டார். ஆனால் மற்றொரு நாள் நான் எதிர்பாராத நேரத்தில் தக்க சமயத்தில் வந்து உதவினார்.
'தெரிந்தே கெடுப்பது பகையாகும், தெரியாமல் கெடுப்பது உறவாகும்' என்று 'படித்தால் மட்டும் போதுமா' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் வரும் தொடரை நாம் அறிவோம்.
எனவே, செய்த உதவியை மறக்காமலிருப்பது உத்தமமாகும். ஒருவர் செய்த தவறை மறந்து மன்னிப்பது சிறப்பாகும்.