பாடலோடு பறவையானேன் -சந்தோஷ்

இசை...! நம்மில் பலருக்கும் தனிமை நிறைத்திருக்கும். இல்லையேல் தனிமைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருக்கும். தனிமையில் ஏதுமற்ற நினைவுகளோடு வெறுமனே நம் மெளனத்தோடு பேசிக்கொள்வது என்பது ஒரு சுகம். தனிமையில் கற்பனையை கட்டிக்கொண்டு கவிஞனாகிவிடும் வரம் தேடி அலைவதும் ஒரு சுகம். அதிலும் நள்ளிரவு 12 மணிக்கு மேற்பட்ட நாழிகைகளில் உலகம் உறங்கும் வேளையில் நாம் விழி மூடி சிந்தனையில் எழும் கவிதை வரியின் இன்பமும் , பிரபல பாடலாசிரியரிகளின் வரியோடு வார்க்கப்பட்ட இசையை கேட்கும் இன்பமும் இருக்கிறதே....!
அடடா.. எந்த பேரழகியும் கொடுக்க முடியா இன்பமடா அது... !
பத்துக்கு பதினாறு அறையில் ஒரு மின்விசிறி கிரீச் விடும் சத்தத்தை பொறுத்திடமுடியாமல் அன்று ஒரு நாள் எனது அலைபேசியில் ஒளிந்துக்கொண்டிருந்த இளையராஜாவை தட்டி தட்டி தனிமைக்கு துணையை தேடினேன்.
ரிதம் ரிதமாக.. ரக ரகமாக மெட்டு போட்டு அவர் உறங்கிவிடுகிறார் , என்னை உறங்கவிடாமல்..! .உத்தரவின்றி என்னில் ஆளுமை செய்கிறது இந்த ராஜாவின் இசை ஆளுமை. ! தட்டியெழுப்பியதும் மெட்டு போட்டு என் ரசனை தலையை ஆட வைத்தார் இசைஞானி. என் அலைபேசியில் வாயிலாக...!
பாடல் ஒலித்தது...!
ஒரு வயலின் வசீகரமாக என் காதில் வாசிக்கப்படுகிறது... சற்று நொடிகளில் பேஸ் கிட்டார் , கீ போர்டின் இசை, புல்லாங்குழல் என்று அலங்கரித்து 25 வது நொடியில் தபேலா தாளம் போட ஆரம்பித்த உடன் குயில் குரல்காரி என் செல்ல இசையரசி எஸ். ஜானகி அவர்கள் வயலின் இசையின் மென்மைக்கு சற்றும் சளைக்காத குரலில் பாடுகிறார் முதல் வரியை
“ பொத்தி வச்ச மல்லிகை மொட்டு..
பூத்திருச்சி வெட்கத்தை விட்டு....”
ஆஹா ஆஹா..... வைரமுத்து வைரமுத்துதானய்யா...! ..
ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்.. காதலிக்கவும் தயாராகிறாள் என்பதை எப்படி அழகாக எடுத்து சொல்கிறார். கவிப்பேரரசு...!
பாடல் தொடர்ந்து ரிங்காரம் சங்கீதமிடுகிறது என் செவியில்......
” பொத்தி வச்ச மல்லிகை மொட்டு!
பூத்திருச்சு வெக்கத்த விட்டு!
பேசிப்பேசி ராசியானதே!
மாமன் பேரச்சொல்லி சொல்லி ஆளானதே!
ரொம்ப நாளானதே!! “ //
இந்த வரிகள் பாடுவது எஸ். ஜானகிதான் என்றபோதிலும்.... காந்த குரலோன்.. என்னுயிரை உரசி முத்தமிட்டு ரசனை தீயேற்றும் ”இன்னிசை வேந்தன்” எஸ்.பி..பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த வரிகளுக்கு இடையே குறும்பு செய்திருப்பார் பாருங்க.. ரசித்து ரசித்து ருசியேற்றிக்கொண்டேன்.
மாமன் பேரச்சொல்லி சொல்லி ஆளானதே.. என்று ஜானகி அம்மா பாடிக்கொண்டிருக்கும் போதே
“ ஆஹாங் “ என எஸ்.பி.பி ஒரு குரல்விடுவார்.
பின்பு ” ரொம்ப நாளானதே “ என வரி முடியும் போது
“ ம்ம்ஹீம் “ என என்னை கிளுகிளுக்க வைத்து பல்லவியை பாலா தொடந்து பாடுவார்..
முதல் சரணத்திற்கு முன்..... இளையராஜா ஒர் அற்புதம் நிழத்தியிருக்கிறார்.. அதாவது பாடல், மெலோடியில் சென்று கொண்டிருக்கும்.. இந்த பாடல் கிராமத்து சூழ்நிலையில் காண்பிக்கப்படுகிறது என்பதை தன் இசை அறிவினாலே நம் செவியினூடே காட்சியை காட்டுவார். ஆம் சரணத்திற்கு முன் வரும் இசையில் பேஸ் கிட்டார் வயிலின் கீ போர்டு என அணிவகுத்து பின்னிப்பிணைந்து வந்தா பிறகு தீடிரென்று நாதஸ்வரம், மங்கள வாத்தியத்தில் கிராமத்தை காட்டிவிட்டார் இசைத்தேவன் இளையராஜா..!
சரணம்.. சரணடைந்து விட்டேன் வைரமுத்துவின் கவிதை அடியில்..!
மாலையிடக் காத்து அல்லி இருக்கு!
தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு!
ஓ... ஓ .. இந்த வரிக்குத்தான் இளையராஜா.. மங்கள மெட்டு போட்டிருப்பாரோ..?? வியந்துப்போனது என் ரசனையின் புத்தி.. என்ன வியப்பு என்கிறீர்களா..!
இந்த பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டது அல்ல.. பாடலுக்காக மெட்டு போடப்பட்டது. நினைத்து பாருங்கள்.. எப்படி இதெல்லாம் சாத்தியம்.. பஞ்சு பொதியில் அமரும் சுகமும்.. மேகத்தின் உறங்கி பறக்கும் சுகமும் ஒருசேரா எப்படி கொடுக்கமுடியும்.? சராசரியானவர்களால் முடியாது... கவிப்பேரரசு எனும் மந்திர கவிஞரால்.. இளையராஜா எனும் மாயஜால வித்தகனால் மட்டுமே முடியும்...
அடுத்த வரி
இது சாயங்காலமா? மடி சாயும் காலமா?// ஜானகி அவர்கள் இந்த வரியில் ஒரு ஏக்கத்தின் மூச்சோடு பாடியிருப்பார். பாடலிலே நாயகியின் பாவனையை குரலால் உணர்த்துவது என்பது அவ்வளவு சாதாரண்ம் அல்ல.
சாயங்காலமா ? என்று காலவேளையை சொல்லி .. அந்த வேளையில் காதலர்கள் மடி சாயும் காலமோ ? என்று வினவுகிறார் கவிஞர். இதுதானே சிந்தனையின் உச்சம் என்பதும் ரசனையின் வெப்பம் என்பதும் இதுதானே. !!
இன்னும் முடியவில்லை..
அடுத்த வரி
“முல்லப் பூச்சூடு! மெல்ல பாய் போடு!
அட வாட காத்து சூடு ஏத்துது!! ” ---// எஸ்.பி.பி, ஜானகி இருவரும் அழகான பாவத்துடன் பாடினாலும் இங்கு வென்றது வைரமுத்துதான்.
முல்லப்பூவை சூடி.....கூடலுக்கு அழைக்கும் காதலனிடம் அதே தொணியில் காதலி.. “ அட ஆமாடா நானும் அந்த ஏக்கத்தில் தானடா “ என்பதை அழகாக கவிப்பேரரசு சொல்லி இருக்கிறார் இப்படி “ அட வாட காத்து சூடு ஏத்துது. “ ம்ம்ம்ம் கவிப்பேரரசு பெரிய மன்மதன் தான்...!
மீண்டும் பல்லவி ” பொத்தி வச்ச மல்லிகை மொட்டு “ ஆரம்பிக்கும் போது ..
, கைத்தட்டல்களே தாளமாக வார்த்து இருப்பார் இசைஞானி..!
கவிஞரின் கற்பனை ஒரு கோணம் என்றால்.. அதற்கு ஏற்றவாறு இசையை கற்பனை செய்வதும் மற்றொரு கோணம். கவிதையை சிந்திப்பது போல இசையை சிந்தித்து உருவாக்குவது எளிதானதல்ல...! கவிதையில் சொற்கள் மீண்டும் வரலாம். இசையில் ஏற்கனவே கேட்கப்பட்ட மெட்டு மீண்டும் வரக்கூடாது.. வரவும் விடக்கூடாது.. வரவும் விடமாட்டார் இந்த இசை கடவுள் இளையராஜா..!
இந்த பாடலின் இரண்டாவது சரணம் ...
சரணத்தின் பாடல் வரிக்கு முன் வயலின் இசையின் உச்சத்தை மெச்சவேண்டும். ரசிக்க வேண்டும். ரசித்தேன்.
சரி பாடல் வரிக்கு வருவோம்..
கவிப்பேரரசு... எந்த கவிதையிலும் பாடல் வரியிலும் எதாவது ஒரு செய்தியை, விஞ்ஞானத்தை, அறிவை... அசால்டாக அள்ளி தெளித்து சொல்லிவிடுவார்.
“ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்!
வெக்க நெறம் போக மஞ்சக்குளிச்சேன்! !”
இந்த வரியில் நன்றாக கவனித்து ரசித்தேன்..
ஆத்துல குளிக்கிற காதலி காதலனை நினைக்கிறா.. நினைச்ச உடனே வெட்கம் வருதாம்... வெட்கம் வந்ததால் மஞ்சள் பூசி குளிக்கிறாளாம். அடடா என்ன ஒரு கற்பனை என்று சொல்லி .. இந்த வரியை நான் தாண்டி செல்ல முடியாது.
மஞ்சளின் மகிமையை இந்த காலத்து பெண்கள் உணர்ந்து இருப்பார்களோ என்னவோ தெரியாது.. கன்னிகளின் முகத்தில் முடிவளராமல் இருக்கவும் , பருவக்கோளாறில் வரும் பருக்கள், சரும நோய்கள் வராமல் தடுக்கவும் மஞ்சள் பூசி குளிக்க வேண்டும் என்பது நம் தமிழ் கலாச்சாரத்தில் சொல்லப்பட்ட முக்கிய மருத்துவ விடயம். இந்த மருத்துவ வியாக்கினத்தையும் மிஞ்சி யோசிக்கிறார் கவிப்பேரரசு..
கன்னியவள் வெட்கப்பட்டாள்
முகம் சிவக்கும்..
சிவக்கும் முகத்தை
மஞ்சள் மறைக்கும்.
அதற்காகவே மஞ்சள் பூசுகிறாள் என்று யாரும் தொடமுடியா சிந்தனையை , இல்லை இல்லை உண்மையான காரணத்தை அறிவுப்பூர்வமாக சொல்லி அசத்தி இருக்கிறார் நம் கவிப்பேரரசு வைரமுத்து.
இந்த பாடல் வெளி வந்தபோது இந்த வரியை பற்றி யாரும் அவ்வளவாக சிலாகித்து பேசவில்லையாம். ”நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே இந்த வரியின் ஆழத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து வைரமுத்துவின் கன்னத்தை கிள்ளிவிட்டு பாராட்டினாராம்.
காதலி மஞ்ச தேய்த்து குளிக்கிறாள் என்றவுடன் காதலன் சும்மா இருப்பானா..? உடனே கேட்கிறான் குசும்பாக...
“கொஞ்சம் மறஞ்சு பாக்கவா?
இல்ல முதுகு தேய்க்கவா? “
மறுக்கிறாள் காதலி... !
”அது கூடாது! இது தாங்காது!
சின்னக் காம்பு தானே பூவத் தாங்குது! ”
காதலன் மீது காமங்கொண்ட தலைவியை ஆசையில் தலைவன் தீண்டினால் ... ? என்ன நேரிடுமோ....?
சின்ன காம்பு தானே பூவத் தாங்குது..! ம்ம்ம்ம்ம்ம் வைரமுத்து அவர்களே.. வள்ளுவன் தொடாத உச்சமோ இந்த வரி..! இல்லை கம்பன் சொல்ல மறந்த பொருளோ இந்த வரி...!
இந்த பாடலில் இசைஞானி இளையராஜா.. கவிப்பேரரசு வைரமுத்து இருவரும் போட்டிபோட்டு என்னை ரசிக்க வைத்தார்கள் என்றால் .. இந்த பாடலின் காட்சியை காணும் போது இயக்குநர் இமயம் பாரதிராஜா... ரசனையின் வயிற்றுக்கு நன்றாக தீனிப்போடுகிறார்.. காட்சிப்படுத்திய விதமும் காட்சியில் நடிக்கும் ரேவதியும் பாண்டியனும் நம்மை 1980 களின் காலகட்டத்திற்கு நிச்சயம் அழைத்து செல்வார்கள். சென்றிருப்பார்கள் தானே..?
மீண்டும் வேறொரு ரசனையுடன் வருகிறேன்.
-இரா.சந்தோஷ் குமார்.
-----------
நன்றி :
இந்த பதிவில் சில தகவல்கள் வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டது.