இசைக்கத்தானே புல்லாங்குழல்

முழுதாய் இருக்கும்
மூங்கில்களை
முனைப்புடன் வெட்டி,
சிறிது சிறுதாய்
சிதைத்து
சீவி சிறிதாக்கி
அனலில் வாட்டி
அங்கம் துளையிட்டு
மெருகேற்றி
குழலாய் உருமாற்றி
குப்பையில் வீசும்
சமுதாயம்
இசையை பற்றி
என்ன அறியும் ?

உருவாக்கப் பட்ட
இசைக்கருவிகளை விட
எருவாக்கப்பட்டவை
ஏராளம் இங்கே !

சில வாசிக்க ஆளின்றி ...
சில நேசிக்க நெஞ்சமின்றி ...
மெழுகை நினைக்கும்
தியாக உள்ளங்கள்
எங்ஙனம் மறந்தன,
இசை தரும் கருவிகள்?...

மற்றவர் மகிழ்வே
வாழ்வென கொண்ட
மனத்தினை மனிதர்
மறந்தது எதனால்?..

கடந்து வந்த
கரடுமுரடு வாழ்க்கையில்
நான் கண்டு மகிழ்ந்த
சில இசைக்கருவிகள்...

உயிருள்ள இசைக்கருவிகள்!
உதாசீனப் படுத்தப்பட்டதால்
ஒதுங்கிக் கொண்ட
உன்னத கருவிகள் ...

அவற்றைத் தள்ளிவைத்து
எதிர்காலத் திட்டங்கள்
எங்கெங்கும் வரையப் படுகின்றன !

காதுகள் இருந்தும் செவிடர்களே!
கருதிக் கேளுங்கள் !
நிற்காத அந்த
நிசத்தின் ஓசை
உங்களுக்கும் கேட்கலாம் ....

எழுதியவர் : அபி (16-Dec-14, 1:58 pm)
பார்வை : 362

மேலே