காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 15 - சித்ரா

சிறகை உலர்த்திய
பறவை தாயால்
உறவை விட்டது
அந்த ஒற்றை இறகு

சுதந்திரம் கிடைத்து
சுற்றித் திரிந்து
சுகத்தைத் தேடுது
அந்த அழகிய இறகு

பால்வண்ணம் சூடி
பனியோடு கூடி
பச்சை வயலோடி
பயணப் பட்டது இறகு

ஆற்று மீன்களில் வாசத்தில்
நாற்று வயல்களின் தேசத்தில்
கற்பனை கால்களின் ஆட்டத்தில்
விளையாடிக் கொண்டிருந்தது இறகு

குருவிகள் கொடுத்த முத்ததில்
குயில்கள் கூவிய சத்தத்தில்
குளிர்ந்த நீரின் தெப்பத்தில்
கும்மாளம் அடித்தது இறகு

இல்லாத கண் கொண்டு
இயற்கையை இனிதாய்
இரசித்தது இறகு

தனிமையும் அழகு
தரணியும் அழகு
என்று மயங்கிப்
போன இறகு
மிதமான காற்றில்
மீண்டும் ஒரு
பயணம் எடுத்தது நகரத்திற்கு

பயண முடிவில்
பசுமை மாறி
புழுதிப் பறந்த
பாதைகள் பார்த்து
பதறிப் போனது இறகு

விளைச்சல் நிலத்தை
வியாபாரம் பேசும்
விவசாயிகளின் வறுமை கண்டு
வியர்த்து போனது இறகிற்கு

கவலைக் கொண்டது இறகு

கவலைக்கு ஆறுதல் தர குயிலின் ஓசை அங்கில்லை
--கண்ணீரை உலர்த்தி விட காற்றும் கூட அங்கில்லை

ஏர் பிடித்த சத்ததைக் கேட்க முடியவில்லை
--எரியும் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை

இளைப்பாற
-- நீரும் இல்லை
-- நிழலும் இல்லை

தனிமைப் பிடிக்கவில்லை
--அதன் தாயும் கிடைக்கவில்லை

மண்ணை மறந்த இறகு
மையல் கொண்ட இறகு
மனதால் நொந்த இறகு
மைக்குப்பியிலே போய் வீழ்ந்த்து

இறகதை எடுத்து எழுதினான் ஒருவன்
இம்மைகளுக்கு இனிமைகள் சேர்க்கவே
--இலைகள் மறுபடி வளரும்; அவன்
செம்மையான வார்த்தைகள் கோர்க்கவே

வார்த்தைகள் கண்டு
வலி தீர்ந்தது; இறகிற்கு
--நிலை மாறுமென்ற
நம்பிக்கைப் பிறந்தது; இறகிற்கு
--அது மீண்டும் போகாது
தன் தாயின் சிறகிற்கு

பின் குறிப்பு : இந்த கவி புனைய துணையாக இருந்த தோழர் திரு. குமரேசன் கிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் தோழர் திரு. ஜின்னா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..:)

எழுதியவர் : சித்ரா (19-Dec-14, 9:06 am)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 165

மேலே