என் வாசலில் சில மின்னல்கள் - 2

--------------------- கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் ? --------------------------------------
( முதலில் நீங்கள் கட்டுரையை படிக்கலாம் .படம் பற்றிய செய்தி கடைசியில் )

தனக்கேற்பட்ட அநீதிக்காக கண்ணகி ஒரு ஊரை ஏன் எரிக்க வேண்டும் ?

தம்பி சந்தோஷின் ஒரு நல்ல மாற்றுச்சிந்தனை படைப்பு படித்து விட்டு என்னுள் ஓடிக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு என் சிறு சிந்தனை ஓட்டங்களும் , இதற்காக இப்போது படித்த இளங்கோவடிகளின் (சிலப்பதிகாரத்தில்) வஞ்சினமாலையும் ஓரளவு பதில் தந்தது .

முதலில் சிலப்பதிகராம் ஒரு கதை . அவ்வளவே . எனவே லாஜிக் படி கண்ணகி மதுரையை எரித்தது எல்லாம் கற்பனையே . ஒரு பெண் போராட்டத்தின் ஒரு மிகுதி பார்வையே அது
" தெய்வம் தொழாஅள்..." குறள் மாதிரி .
இரண்டாவது சிலப்பதிகார கோட்பாடே "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் " என்பதே . துறவியான இளங்கோவடிகள் அப்படி எழுதியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை . விதிதான் கோவலனை கொன்றது , மதுரையை எரித்தது என்று அவர் வஞ்சினமாலையிலும் , பின் வரும் கட்டுரை காதையிலும்
ஏன் கோவலன் மதுரையை அடையும் போதிலிருந்து விதியை பற்றி இளங்கோ நிறைய எழுதுகிறார் .

சரி இப்போது கேள்விக்கு வருவோம் ...பதிலுக்கும் . தமிழ் சான்றோர் நிறைய பேர் இங்குண்டு . தவறுகள் இருப்பின் திருத்தவும் . தங்கள் கருத்தையும் பகிரவும் ...எல்லோரும் பயனுற .

கண்ணகி சோழ நாட்டை சேர்ந்தவள் . மதுரை பாண்டியநாட்டு தலை நகரம் . இரண்டும் வெவ்வேறு நாடுகள்.
வட கொரியா , தென்கொரியா போல் ..ரஷியா உக்ரைன் போல ... அல்லது இப்போதுள்ள ஆந்திரா , தெலங்கானா போல் ( அந்த அளவு பகைமை இங்கு இருக்கிறது .. உங்கள் தகவலுக்கு ...நான் தெலங்கானாவில் இருக்கிறேன் )

எனவே ஒரு எதிரி நாட்டு மன்னன் தவறுக்கு எதிரி நட்டு மக்களனைவரும் தண்டிக்கப் படுகின்றனர் . இது இன்று வரை உண்டு , துரதிர்ஷ்டவசமாக.
தவிரவும் கோவலனை கள்வன் என்ற போது அந்நாட்டு மக்கள் ஒருவரும் எதிர்க்க வில்லை , மந்திரிகள் , புலவர்கள் எவரும் மன்னனை எதுவும் கேட்க வில்லை ."குற்றவாளி" யின் பின்புலனை கூட ஆராச்சி செய்ய வில்லை . எந்த நீதிகளும் , முறைகளும் , மன்றங்களும் பின்பற்றப் பட வில்லை .
இப்போது கூட ஒருவரை கொன்றார்கள் பக்கத்து நாட்டில் ...இறந்தவரை எப்படி காட்ட வேண்டும் என்ற நெறி கூட இல்லாமல் அந்த அரசாம்கம் நடந்த போது அங்குள்ள மக்கள் , கற்றோர் , மனித ஆர்வலர்கள் என்ன செய்தார்கள் ?

அமேரிக்கா ஒரு அதிபரை chemical weapon வைத்திருப்பதாக குற்றம் சாட்டியது . எத்தனை பேரை அழித்தது ? கடைசில் ஒரு chemistry குடுவை கூட கிடைக்கவில்லை ...
யார் கேட்டார்கள் அந்த நாட்டில் என்று அந்தந்த நாடுகளின் மீதே நமக்கு கோபம் வருகிறது இல்லையா ?

அதே போன்ற கோபம்தான் கண்ணகிக்கு ....
சில பாடல்களையும் , என் பார்வையையும் பதிக்கிறேன்.
..........................................................................................................................
"நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின் "... ( வஞ்சின மாலை 40 )

"யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து " ( வஞ்சின மாலை 45 )
..............................................................................................................................................
பொருள் -
" மதுரை மக்களே / மகளீரே / கடவுளரே / நல்லோரே கேட்டிடுவீர் .தவறிழைத்த கோநகர் சீறினேன் " என்று தன் இடபக்க முலையை சீற்றத்தில் எறிகிறாள் . மதுரை எரிகிறது . ( இது கற்பனையின் மிகுதியே .. மறுபடி சொல்லிக் கொள்கிறேன் )...தவறிழைத்த கோநகர் என்று சேர நட்டு இளங்கோவடிகள் சொல்கிறார் . எல்லாம் தனி தனி நாடு ...முன் சொன்னது போல்.

எரிக்க முற்படும் போது அக்கினி தேவன் வந்து சொல்கிறான் ..(.கீழே பாடல் )
......................................................................................................................................................
"மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் (வஞ்சின மாலை 50 )

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் ' ( வஞ்சின மாலை 52 )
....................................................................................................................................................................
பொருள் -
எரியங்கி வானவன் - அக்கினி கடவுள் .. கேட்கிறான்....

மா பத்தினியே உனக்கு பெரிய தவறு இழைத்த நாளிலே ..
பரவுகின்ற தீயை ஊட்டும் படி , இந்த நகரத்திற்கு , முன்னமே ஓர் ஏவலைப் பெற்றிருக்கின்றேன் ஆதலால் அதன்படி எரிக்கும்போது பிழைப்பார் யார் என கேட்கிறான்.

அப்போதும் அவள் முதியோர் , குழந்தைகள் , பெண்கள் தவிர்த்துதான் எரிக்க ஆணை இடுகிறாள் . ( கீழே பாடல் )
.......................................................................................................................................................................................
"பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய ( வஞ்சினமாலை 55 )

...............................................................................................................................................................................................

கடைசி வரி காணுங்கள் ...
தீயவர்கள் பகுதிகளில் மட்டுமே எய்துவாயாக ...என்று முடிக்கிறார் இளங்கோ .கண்ணகியும் வஞ்சினத்தை முடிக்கிறாள் அவ்வாறே .
நானும் முடிக்கிறேன் ...

.... மின்னும் இன்னும் .
பாடல்கள் குறிப்புக்கு - நன்றி தினமலர் இணையம் .

படம் - திருமதி அஞ்சலை பாண்டியன் .
ஒரு கலப்பு காதல் திருமண ஜோடி தேடல் விசாரணையில் திரு கஸ்தூரி காந்தி , காவல் துறை உதவி ஆனணயர் இவர் கணவர் பாண்டியனை கொன்று , தற்கொலையாக ஜோடிக்க பல ஆண்டுகள் போராடி அந்த காந்திக்கு கைவிலங்கு போட செய்தவர் இந்த அஞ்சலை .
தற்போது அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருகிறார்.
அஞ்சலை இந்து நாளிதழில் - " அந்த போலீஸ்காரர் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரியில படுத்திருக்கிறதா சொல்றாங்க ஒரு கைதுக்கே அவங்களுக்கு நெஞ்சுவலி வருதுன்னா கணவரை அநியாயமா பறிகொடுத்த என்னோட நெஞ்சு என்ன பாடுபட்டிருக்கும்? "

எழுதியவர் : ராம் வசந்த் (28-Dec-14, 2:44 pm)
பார்வை : 410

சிறந்த கட்டுரைகள்

மேலே