புலன்களுக்கு அப்பால்

பூவுக்கும் வலிக்கும்
பூக்காம்பை கிள்ளும்போது
எறும்புக்கும் வேர்க்கும்
எடைகூடிய பொருள் தள்ளும்போது

அண்ணாந்து பார்த்தபோது
வானத்தில் சந்திரன் அசைந்து
போய்க்கொண்டிருந்தான்
நீ -
உன்னுடைய நாளேட்டில் எழுதினாய்
வானத்தில்
சந்திரன் மட்டும் இருந்தான்.

அடுத்தொரு பகல் பொழுது
அப்போது
உன் நாளேட்டில் எழுதினாய்
வானத்தில் சூரியன் மட்டும் இருந்தான்.

உள்மனதில் சின்னதாய்
உனக்குள்ளே சந்தேகம்
நேற்றைய சந்திரன் எங்கு போனான்
இன்றைய சூரியன் எங்கிருந்தான்.

இருந்தும் இல்லாமல் ஆனதேன்
இல்லா திருந்தும் இருப்பதேன்
நிசப்தம் எங்குமில்லை
நீ- சப்தம்
என்பது மட்டும் சப்தமில்லை

கருவறை குழந்தை
பனிக்குடமுடைத்து
வரும்போதும் சத்தம்

மொட்டு
பூவாக
மலரும்போதும் சத்தம்

காய்ந்த சிறகு
கிளையில்
கடைசி தொடுதலை
விட்டு விழும்போது சத்தம்

வண்ணத்துப் பூச்சி
தன் புழுவாடை
விட்டுவரும்போதும் சத்தம்

தொடுதிரை விலக்கி
தொடாதிரையில் பார்வை செலுத்து
ஆரவாரங்களுக்கு அப்பாலும்
உன் ஏழாம் அறிவை உபயோகப்படுத்து

அப்போது வானத்தில்
உனக்கு
சூரியர்கள் சந்திரர்கள்
ஒருசேரத் தெரிவார்கள்

உன்னிதயத்
துடிப்பு
உனக்கு கேட்கும்.

மொட்டு மலராகும் சத்தத்தில்
மெய்மறந்து போவாய்

இதையெல்லாம் பார்க்காமல்
இதையெல்லாம் நுகராமல்
தலைக்குள் உள்ளிருக்கும்
திரவமும் திடமும் சேர்ந்த கலவையில்
செய்த கணினியை
மாசு படுத்துகிறாய்
எம்மதமும் எம்மார்க்கமென்று
காண்போரிடத்து சமர் புரிந்தே.....

ஆறையும்
ஆண்டு
அதையும்
தாண்டு .

எழுதியவர் : சுசீந்திரன். (28-Dec-14, 10:10 pm)
பார்வை : 128

மேலே