2020 -ல் சகாரா

உண்ணாக்கில எச்சில் விட்டு
உண்ணாம உறங்காம
ஊர் கழனியில கஸ்டப் பட்டோம்
நெல்லு கரும்பு வாழ நட்டோம்
நட்டத்தால கஸ்டப்பட்டோம்
கெட்ட காலம் விட்டுப் போக
காவிரி கை கொடுக்க
காய்கனியும் கழனியில நட்டோம்
ஏழை வயிற்றுச் சுருக்கு
பேழையா கொஞ்சம் விரிய
புழுதி கையில
புது நோட்டு புரள
சந்தோசப் பட்டதுண்டு
புள்ள பிரசவம் முதல்
புள்ளக்க புள்ள பிரசவம் எல்லாம்
இந்த துட்டு .... இந்த கழனி...
இந்த காவிரி இந்த மண்ணு
வாழ வச்சதுண்டு
பொண்ணு விளையிற மண்ணுல
நின்னு பிழைக்க வழியில்ல
கொன்னு போட்டாலும்
மண்ணு போட மண்ணு இல்ல
இயற்கையா காத்து
வந்து போகும்
எங்க கழனியில
கெவர்மெண்ட்காரன் கால வச்சான்
எங்க குரல்வளையில கைய வச்சான்
உழைச்சு உண்டவங்க
உண்ணாம விரதம் இருக்க
கழனிய எல்லாம் கைமாற்றி
களர் நிலம்தான் ஆக்குறாங்க
காயங்கள தந்து தந்து
கைகட்டி வாய்பொத்தி
நிக்கத்தான் சொல்லுறாங்க
சர்க்காரே...!
மீத்தேன் வாயுவ எடுக்கும் முன்னே
எங்களோட
பிராண வாயுவையும் எடுத்துக்குங்க
உங்கள எதிர்த்தா
நாங்க எல்லாம் தேசத் துரோகி
தேசத்த விலைபேசுற நீங்க
அரசியல்வாதி
காலம் மாறி விட்டது
நிரூபணம் ஆகிவிட்டது
ஒத்த குரலில போராடாம
மொத்தமா எங்கள பிரிச்சீங்க
ஒற்றுமையில் வேற்றுமை ஊட்டி
மது சின்னமா மாத்தினீங்க
எப்படியாயினும்
இரண்டாயிரத்து இருபதில்
இந்தியா...
வல்லரசாய் இருக்கும்
அன்று ....
சகாரா
தமிழ்நாடாய் இருக்கும்