நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”

நிலவொளியை ரசித்திருக்கும் தமிழர்களே உயருங்கள்
------ நிலவிற்கே நாம்சென்று ரசிக்க - அங்கு
நிலமதிலே ஏர்உழுது நீர்பாய்த்து நெல்விதைத்து
------ நிரந்தரமாய் நாம்அங்கு வசிக்க

சூரியனின் ஒளிவேக சூத்திரங்கள் கண்டறிந்து
------ மின்சார உற்பத்தி தொடங்கு - அது
சேரிகளின் இருள்சூழ்ந்த வீட்டுக்கும் இலவசமாய்
------ சேரட்டும் இருநூறு மடங்கு

வீட்டுமனை எல்லாமே விளைநிலமாய் மாறட்டும்
------ விவசாயம் மீண்டுமிங்கு செழிக்க - இதில்
நாட்டுக்குள் பசுமையெனும் புரட்சிவிதை முளைக்கட்டும்
------ நமக்குள்ளே பஞ்சத்தை ஒழிக்க

கடலின்மேல் நடப்பதற்கு கவிழாத கப்பல்போல்
------ கண்டுபிடி புதுக்கருவி ஒன்று - அதில்
நடந்தேநாம் சென்றிடுவோம் அலையோடும் வலையோடும்
------ நடுக்கடலில் மீன்பிடிக்க இன்று

கணினிகளின் செயல்பாட்டை தமிழுக்கு தடம் மாற்றி
------ கணக்கிடலின் உச்சத்தைக் கூறு - நாளை
அணிவகுத்துச் செல்கின்ற அமெரிக்க கூட்டங்கள்
------ அனைவருமே தமிழ்கற்கும் பாரு

செயற்கைக்கோள் தமிழ்மொழியில் செய்திகளை அனுப்பட்டும்
------ செவ்வாயின் நேர்க்கோட்டில் சுற்றி - இந்த
பயனுள்ள அறிவியலை பாமரனும் கற்றால்தான்
------ தமிழுக்கு அது கிடைத்த வெற்றி
==================================================================

இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #8, மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர் 607 002
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9739 544 544

எழுதியவர் : ஜின்னா (8-Jan-15, 3:36 am)
பார்வை : 484

மேலே