சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

நெய்தல், தன்னிலைமறந்து குன்றியது குன்றுருவாக்கி
குறிஞ்சாகி, மருதமதனை பின்தொடரும் வேளையது..!
நரிக்கூட்ட பனங்காட்டு வெளியினிலே
குகையொன்று அமையப்பெற்று
அதிலொரு ஆதிக்குடி ஆணொருவன் வாழ்ந்துவந்தான்..!

இயற்கையெனும் பொருள்விளங்கா கடவுளவனை
ஆதிப்பெண்ணொருத்தி அழகியலை விளங்கவைக்க
கூட்டமொன்று உருவாகிப்போனது..!

தன்னப்பன் தெரிந்து பிறந்த குழவிக்கு
பொருளும் பெருகிப்போகவே, தனிக்குடும்பம் தழைக்கத்துவங்கி,
பொருளீட்டல் முதன்மையாக, சீர்படுத்த
நல்லரசமைப்பு உருவாகி,
பின்னதுவும் சீர்கெட்டுப்போகும் நேரம்,
தொழிலுக்கொரு சாதிப்பெயரிட்டு,
சாதிக்கொரு சங்கமிட்டு
சங்கத்திற்கிடையே கலகம் கற்பிக்க
வந்தேறி வானரங்கள், வகை வகையாய் சிந்திக்க
மதமுருவாயிற்று விளைபொருளாய்..!
மனிதமதற்கு எரிபொருளாய்..!

மனிதம் தின்று,
வந்தேறி கையூட்டில் களிப்புறும்
எம்மினத்தை தின்று கொழிக்கும் மதமே,
எங்களை மனிதர்களாய் வாழவிடு!
சாதியை சாகவிடு, எங்களை சாதிக்கவிடு..!

( இப்படைப்பு நான் சொந்தமாய் எழுதியது என உறுதி அளிக்கிறேன் . )

பெயர்: சக்திவேல் காந்தி
வயது: 28
தற்பொழுதைய வதிவிடம்: சாங்வான் பல்கலைக்கழகம், சாங்வான், தென்கொரியா
அழைப்பிலக்கம்: +821023775586

எழுதியவர் : சக்திவேல் காந்தி (10-Jan-15, 9:49 pm)
பார்வை : 113

மேலே