அது வாகிப் போனவர்கள்

"அது" வாகிப் போனவர்கள்.....

“அத்தை.. அத்தை..” என்றழைத்தவள்
அமரர் அறைக்குள் இருக்கிறாளாம்
அழைப்பு வந்தது
பார்க்கவும் பரிதவிக்கவும்...

குமுறிய உடலோடும்
கொட்டிய கண்ணீரோடும்
பதறியடித்து சென்றதில்
மங்கலாய் பார்வையில்
அந்த அமரர் அறை...

யாரோ வந்து திறந்தார்கள்
குளிர்வாடையும்... துர்வாடையுமாய்...
அறைந்த தாக்குதலைவிட
கோர தாக்குதல் கொத்து பிணங்களால்...

"ஐயோ... நித்யா... ஐயோ நித்யா.."
என் குமுறலுடன்
"ஐயோ... என் செல்ல மகளே...
என் செல்லக் கிளியே
வந்தது தெரியாம தூங்கிக் கெடக்குரியே"
என் நாத்தியின் ஓலமுமாய்..
முந்தானைத் தலைப்பு மூடலில்
நாசியும் வாயும்...
இடையினில் சிக்குண்ட கதறல்கள்...

விபத்தில் சிக்கியதும்
தீயில் வெந்ததும், நோயில் வீழ்ந்ததும்
தூக்கில் தொங்கியதும்
பஞ்சத்தில் மடிந்ததுமாய்...

அத்தர் பூசியவனும்
சகதியில் கிடந்தவனும்
கையூட்டு வாங்கியவனும்
கடமை தவறாதவனுமாய்

தொழுகை நடத்தியவனும்
தோப்புக் கரணம் போட்டவனும்
தேவாலயத்தில் ஜெபித்தவனுமாய்..

பஞ்சணையில் உறங்கியவனும்
பாயில் கிடந்தவனும்....
படுக்கை விரிப்பு எதிர்பார்ப்பின்றி...
சமரசத்துடன் ஆங்காங்கே...

நேற்றுவரை அவர்களாய் இருந்தவர்கள்
இன்று "அது" வாகிப் போயிருந்தார்கள்...

தலை சுற்றியும் உடல் சரிந்தும்
என்னுள் முனகல்கள்...
வாழப் பிறந்தவளை எடுத்துக் கொண்டாயே
கூற்றுவா...
வாழ்வதாய் வாழ்பவளை ஏன் விடுத்தாய்??

விண்ணப்பம் வைத்தபோது
கூற்றுவனின் பதிலாய்...
எனக்கு மட்டும் சிறப்புச் சலுகையாம்
தவணை முறைகளில்...

எழுதியவர் : சொ. சாந்தி (12-Jan-15, 10:51 pm)
பார்வை : 223

மேலே