கடவுளின் வீட்டுப்பாடம்

வாழ்க்கை
என்ற கண்ணாடியில்
நம் பிம்பம்
சக மனிதனே !
==========================
எக்ஸலில் போடும்
கணக்குகளில் இல்லை
வரவுசெலவுப் புத்தகத்தின்
வாசனை !
==========================
பூமியெங்கும்
கதிரியக்க வேலிகள் !
வானத்திற்கு
புலம்பெயர்ந்து
கொண்டிருக்கின்றன
சிட்டுக்குருவிகளும் ........
பட்டாம்பூச்சிகளும் .......
==========================
போகோ
பார்த்து விட்டு
உறங்கச்செல்கிறாள்
சிறுமி !
சீரியல்
பார்த்து விட்டு
உறங்கச்செல்கிறாள்
பாட்டி !
இவர்கள்
இருவரையும்
பார்த்துக்கொண்டு
உறங்காமல்
இருக்கிறது
கதை !
==========================
போனகாரியம்
உருப்படவில்லை !
யாரை
நொந்து கொள்வாள்
விதவை ?
==========================
பொங்கல் வைக்கிறான்
விவசாயி ..........
கடையில்
அரிசி வாங்கி !
==========================
ஆகஸ்ட் 15 க்கு
அடுத்தநாள் ........
குப்பைத்தொட்டியில்
தேசியக்கொடி !
==========================
சுயஇன்ப போகியில்
கலாச்சாரக் குப்பைகள்
எரிக்கப்படுகின்றன !
==========================
பக்கத்தைப்
புரட்டினேன் ......
விசும்பியது
மரம் !
==========================
சிறகொடிந்த
பட்டாம்பூச்சிகளுக்கு
இன்னும் இங்கே
மருத்துவர்கள்
இல்லை !
==========================
யு. கே. ஜி
படிக்கும்
தன் அண்ணனின்
நோட்டுப்புத்தகத்தில்
கிறுக்கும்
ஒரு குழந்தையின்
வாயிலாக
தனது அன்றைய
வீட்டுப்பாடத்தை
முடிக்கிறார்
கடவுள் !