எச்சில் மார்பீந்தும் ஈனப்பிழைப்பு எதற்கடிப் பெண்ணே

ஐம்பதிற்கும் நூறுக்கும்
அடுத்தவேளை உணவிற்கும்
அறிமுகமில் லாதவனோடும்
அம்மணம் பகிர்ந்திடுவாள்....

குடிகாரக் கணவனாலோ
சதிகாரக் காதலனாலோ
பழிபாவமறியாப் பாவை
பலருக்கும் விருந்தாகிடுவாள்....

பகலெல்லாம் படுக்கையிலே
படாத இரணங்கள்பட்டு
பசியாற்ற பிள்ளைக்கு
எச்சில்மார்பை ஈந்திடுவாள்....

அற்ப பணம்கொடுத்து
அபலையினை வாங்கியவன்
அரக்கனாக மாறி - அவளின்
அங்கமெல்லாம் குதறிடுவான்....

இன்னும் சிலப் பிறவிகளோ
இலவசமாய் வந்துப்போகும்
பதவியொன்றை வைத்துக்கொண்டு - தேகப்
பசிக்குக்கூட பிச்சையேந்தும்....

உடலாலும் மனதாலும்
வேதனைதான் எந்நாளும்
உண்மையது தெரிந்துவிட்டால்
உதறிவிடும் பிள்ளைகளும்....

ஆதலினான் பெண்மனமே
அணுகிடாதே விபச்சாரத்தை
அடியோடு அத்தொழிலை
அழித்துவிட உதவிசெய்....

உழைப்பதற்கு பலவழிகள்
உலகத்தில் இருக்கிறது - பெண்ணே
கழிவறைக் கழுவுதல் சிறப்பு - உன்
உடல்விற்றுப் பிழைப்பதற்கு....

எழுதியவர் : யாழ்மொழி (19-Jan-15, 3:19 pm)
பார்வை : 313

மேலே