எங்கே முடிகிறதுஎன்ன அது
கண் முன்னே கிடக்கும் காகித துண்டு முதல் கண்ணுக்கு தெரியாத தூரத்தில் எங்கோ இயங்கிக் கொண்டிருக்கும் வான மண்டலத்து நட்சத்திரங்கள், ஒன்றும் இல்லாத வெளி (space )வரை எல்லாவற்றிலும் இருப்பது எது .. இல்லாதது எது.. என்று யோசித்துக் கொண்டே போகிற நினைவுப் பாதையில், வருகின்ற எண்ணங்களும் காட்சிகளும் ஒரு புள்ளியில் போய் முடியும்..! அது.. அந்த புள்ளி.. விளங்க முடியாதது.. அல்லது விளங்கிவிட்டது போல் தெரியும் ஓர் மாயையாகத்தான் (illusion ) இருக்கும். அப்படியென்றால்.. அசைவன..அசையாதன.. இயங்குபவை..இயக்கம் இல்லாதவை.. உயிர்கள்..உடல்..மனிதர்கள்..அவர்களது நம்பிக்கைகள்..குணங்கள்..உயர்வுகள்..தாழ்வுகள்..நிலைப்பவை..நிலையாதவை.. என்று..அறிவிற்கு..எனது அறிவிற்கும்..என் போன்ற ஏனையோரது அறிவிற்கும்..மாறுபட்ட கருத்து கொண்ட மனிதரது அறிவிற்கும்..அறிஞர்கள் அறிவிற்கும்..ஞானியர் அறிவிற்கும் எட்டியவை என்னென்ன..எட்டாதவை என்னென்ன..எல்லாம் அந்த புள்ளியில் போய்தான் நிற்கும்..அது அமைதியாக இருக்கும்..அசைவின்றி இருப்பதாக தெரியும்..அதற்கு தொடக்கம் என்று ஒன்று இருந்திருக்க முடியுமா.. அல்லது முடிவு என்றுதான் ஒன்று வரக் கூடுமா.. வாய்ப்பே இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது..!
சரி..அப்படியென்றால் அது மாபெரும் சக்தியா.. அதுதான் எல்லா இயக்கத்திற்கும் காரணமா..அதைத்தான் கடவுள் என்கிறோமா..அல்லது இதைப் பற்றியெல்லாம் தனக்கு சம்மந்தமில்லை என்று சும்மா இருக்கின்ற ஒன்றா அது..என்று கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன..! விடை..இறுதியில் .. தெரியவில்லை.. என்பதாகத்தான் இருக்க முடியும்.. ஒன்று இருக்கிறது..ஆனால் அது தெரியவில்லை ..அல்லது அதைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பதே உண்மை.. ஒருவர் அதைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதிலும் நம்புவதும் அவருக்கு அமைதி தருகிறது.. மேலும் அவர் .. அதுதான் கடவுள் என்று நம்புகின்ற நிலையில் அவரைப் பொறுத்த வரை கடவுள் அவருக்கு இருக்கிற வஸ்து....அதை இன்னொருவர் தப்பு என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்க முடியும்..?
அதே போல் ஒருவர் கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று சொல்வதையும் ..இல்லை..இல்லை..கடவுள் உண்டு என்று அடித்து பேசுவதிலும் என்ன சாதித்து விட முடியும்.. எனவே.. எனக்குத் தோன்றுவதெல்லாம்..தனக்குத் தெரியாத ஒன்றை தனக்கு தோன்றிய வகையிலோ.. கற்பிக்கப்பட்ட முறையிலோ நம்பிக்கை கொள்வதை விட.. தான் உணர்வதையே உண்மையென கொள்வதே சிறந்தது..அதை மற்றவர்கள் அவரவர் உணரும் வகையில்..வரையில்.. அதைப் பற்றி பேசுவதோ ..திணிப்பதோ..சரியான செயலாக இருக்காது என்று திடமாக நம்புகிறேன்..மூட நம்பிக்கைகளும் .. போதனைகளும்..பகுத்தறிவு வாதங்களும் ..எல்லாவற்றிற்கும் இது பொருந்தக் கூடும் !
இதைத் தவிர்த்து.. நான் சொல்வது உண்மை என்றோ.. என்னை பின்பற்று என்றோ சொல்ல எவருக்குமே உரிமை இல்லை என்று எண்ணுகிறேன்..இது கூட தவறாக இருக்கலாம்..எனக்கு சரியென்று படுவது என்னோடு மட்டும் இருந்து விட்டு போவதில் யாருக்கும் நஷ்டமுமில்லை..யாருக்கும் லாபமும் இல்லை..!
சொல்லுபவர் யாராகவேனும் இருக்கட்டும்..சொல்வது எதுவாகவேனும் இருக்கட்டும்.. விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.. தன் உணர்வு சொல்வதை பின்பற்றுவதே என்றும் அமைதி தரும்..மற்றதேல்லாமே..அவஸ்தை தரும் என்று எண்ணுகிறேன்..!
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
