நியூட்டன் விதி
"ஏன்டி மணி ஆகுது சீக்கிரம் வானு காலைல இருந்து சொல்றேன் இன்னும் கெளம்பிட்டு இருக்க"சத்யா.
"இருங்க நான் என்ன சும்மாவா இருந்தேன், இன்னைக்கு பையனுக்கு பரீட்சை அவனுக்கு
சொல்லி கொடுத்து கெளப்பி விட வேணாமா"திவ்யா.
"எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்து ரெண்டு நாள் ஆச்சு, இன்னைக்கு தான்
எனக்கு ஆபீஸ்ல லீவ் கெடச்சது, எங்கம்மாவ பாத்துட்டு அப்டியே சினிமாவுக்கு போகலாம்னு
டிக்கெட் கூட வாங்கி வந்துட்டேன், நீ லேட் ஆக்குற"சத்யா
"சரி சரி புலம்பாதிங்க, அவ்ளோதான் கிளம்பிட்டேன்"திவ்யா
"ஓகே போலாமா?"சத்யா
"வாங்க போலாம்"திவ்யா
இருவரும் வீட்டு கதவை பூட்டிவிட்டு வெளியில் வந்து ஆட்டோ பிடிக்கிறார்கள்.
அன்னை தெரசா முதியோர் இல்லம்.
இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ளே செல்கிறார்கள்.
"ஏங்க சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும், உங்கம்மா அத கேட்குறாங்க இத கேட்குறாங்கனு
வாங்கி கொடுத்துட்டு இருக்காதிங்க" திவ்யா.
"சரிடி எல்லாம் எனக்கு தெரியும் வா முதலில் மேனஜர பாத்துட்டு பணம் கட்டிட்டு அப்புறம் போய்
எங்கம்மாவ பாக்கலாம்"சத்யா.
"சரி வாங்க போலாம்"திவ்யா.
மேனஜர் அறைக்குள் செல்கிறார்கள்.
மேனஜர்"வாங்க வாங்க,போன் பண்ணி ரெண்டு நாள் ஆச்சு இப்பதான் வரிங்க"
"என்ன சார் பண்றது இப்பதான் லீவு கெடச்சது" சத்யா.
"சார் அதுக்குள்ள உங்கம்மாவுக்கு எதுனா ஆனா என்ன பண்ணுவீங்க"
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, இந்தாங்க இந்த மாசம் கட்ட வேண்டிய பணம்"திவ்யா.
"சரி சரி வாங்க உங்கம்மாவ பாத்துட்டு கெளம்புவோம்" என்று சத்யாவை பார்த்து திவ்யா சொல்லிவிட்டு
அழைத்து செல்கிறாள்.
சத்யா அம்மாவிடம் நெருங்கி செல்கிறார்கள்.
சத்யா"அம்மா என்னமா ஆச்சு உனக்கு" என்று எரிச்சலுடன் கேட்கிறான்.
சத்யா அம்மா "எனக்கு ஒண்ணுமில்லடா போக வேண்டிய நேரம் வந்துடுச்சி, அத விடு நீ நல்லாருக்கியா"
சத்யா"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன், உனக்கு என்ன வேணும்னு அடிக்கடி போன் பண்ண சொல்லிட்டு இருக்க"
ச.அம்மா"எனக்கு ஒரு ஏசி வேணும்டா"
சத்யா"உனக்காக தான் இங்க வேற பெட்டு வேற போர்வைனு தனித்தனியா
வாங்கி போட்டேன், இப்போ ஏசி கேட்குதா"
ச.அம்மா"எனக்கு இல்லடா, எப்பவும் உன் பொண்டாட்டி உன் பையன பாத்து
அவன் உன்ன மாதிரின்னு அடிக்கடி சொல்லுவா"
"அதுக்கு என்னம்மா இப்போ"
"அவனும் நீ என்ன வந்து விட்ட மாதிரி அவனும் வந்து விடுவான்ல, அவ வசதியா வளந்த பொண்ணுடா,
அதான் அவளுக்காக கேட்டேன்"
திவ்யா"வயசானாலும் திமிரு உங்ககிட்டு இருந்து போகல, இந்த மாதிரி பேசுறனால தான் இங்க வந்து கெடக்குறிங்க,
என்னங்க வாங்க போலாம்"
சத்யாவும் திவ்யாவும் கிளம்பி செல்கிறார்கள்.ஆட்டோ பிடித்து வீட்டுக்கு செல்கிறார்கள்.
வீடு வந்ததும் இறங்கி பேசிக்கொண்டே,
திவ்யா"இதுக்குதான் நான் அங்க வர ரொம்ப யோசிச்சேன், இப்போ பாருங்க சினிமாவுக்கு போற மூட் போயிடுச்சி"
சத்யா"சரி விடு இன்னும் கொஞ்ச நாள் தானே"
வீட்டில் நுழையும்போதே அவர்கள் பையன் டிவி பார்த்திட்டு இருக்கான்.
திவ்யா"டேய், நாளைக்கு பரீட்சை தானே படி அப்புறம் டிவி பாக்கலாம், நாளைக்கு என்ன பரீட்சை"
பையன்"அறிவியல்மா"
திவ்யா"சத்தமா படி, நீ படிக்கிறது என் காதுல கேட்கணும், நான் உனக்கு காப்பி போட்டு வரேன்"
பையன் சரி என்று தலையை ஆட்டிவிட்டு, புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறான்
"நியூட்டனின் மூன்றாம் விதியை கூறு? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு"
சமையலறையில் காப்பி டம்ளர் கீழே விழும் சத்தம் கேட்கிறது.