உண்மைக் காதல்
உண்மைக்காதல்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பெண்ணழகை கண்டுநெஞ்சுள் கவர்ச்சி யாலே
பெருகிவரும் ஆசையதா காத லாகும்
கண்ணெதிரில் பெரும்பணத்தில் புரளும் ஆணைக்
கண்டுமனம் மயங்குவதா காத லாகும்
கண்ணோடு கண்நோக்கி அன்பு தோன்றி
கலந்தநெஞ்சில் பிறந்ததுதான் உண்மைக் காதல்
மண்ணாளும் அரசமகள் தடைக் கடந்து
மனம்கலந்த *பதிவதிதான் உண்மைக் காதல் !
அய்ந்திணையில் தமிழரன்று களவு தன்னில்
அகமிணைந்தே அடுத்தடுத்துக் குறிகள் சொல்லி
மெய்யன்பைப் பாங்கிபாங்கன் வழிதொ டர்ந்து
மெய்தொட்டு மணம்முடிக்கப் பொருளை ஈட்ட
தையலினைப் பிரிந்துவெளி நாடு செல்ல
தையிழந்தும் உடல்மெலிந்தும் அலரெ ழுந்தும்
கையணிகள் கழன்றுவீழ்ந்தும் உறுதி யோடு
கற்பதனைக் கண்டதுதான் உண்மைக் காதல் !
பூங்காவில் திரையரங்கு சாலை யோரம்
புரிகின்ற விளையாட்டு காத லன்று
பாங்காகக் கல்விகற்கும் பருவம் தன்னில்
பழகுவதும் பேசுவதும் காத லன்று
ஓங்கிகுலம் தழைப்பதற்கே மனங்கள் ஒன்றி
ஓருயிர்தான் ஈருடலை இயக்கல் காதல்
தீங்கிழைக்கும் சாதிகளின் தடையு டைத்துத்
திண்மையுடன் இணைவதவே உண்மைக் காதல்!
*அம்பிகாபதி,அமராவதி.
( காதலர் தினம் பிப்ரவரி 14 )